உங்களால மாவட்ட செயலாளர் பதவி போயிடுச்சு! : கண் கலங்கிய ரசிகர்; அதிர்ந்து போன ரஜினி

Get real time updates directly on you device, subscribe now.

rajini1

‘கன்னித்தீவு’ சித்திரக்கதை எப்போது முடியும்? என்று கேட்பதும், ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?’ என்கிற கேள்வியைக் கேட்பதும் ஒன்று தான்.

இரண்டுமே பதில் தெரியாத கேள்விகளாகத்தான் இருக்கின்றன.

குறிப்பாக அரசியலில் வருவது குறித்து ஒவ்வொரு முறை மேடைகளில் பேசும் போதும் குழப்பமான பதிலையே சொல்லி வந்த ரஜினி முந்தாநாள் ரசிகர்கள் உடனான சந்திப்பிலும் அப்படி ஒரு குழப்பமான பதிலையே தந்தார்.

இதனால் வழக்கம் போல தலைவர் வருவாரா? மாட்டாரா? என்கிற குழப்பத்திலேயே இருந்த அவர்களது ரசிகர்களில் ஒருவர் சந்திப்பு மேடையில் ரஜினியிடம் நேருக்கு நேராகவே அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டார்.

கிட்டத்தட்ட அது அவருடைய மனக்குமுறல் என்று தான் சொல்ல வேண்டும்,

நேற்று காலை மூன்றாம் நாள் சந்திப்பில் ரஜினியை சந்தித்த அவரது ரசிகர் ஒருவர், ரஜினியோடு ஒரு நிமிடம் பேச அனுமதி கேட்டுள்ளார். ஆனால் நேரமில்லை, நிறைய பேர் இருக்காங்க என்று ரஜினி மறுக்க அந்த ரசிகர் இப்போது நான் இதை பேசவில்லை என்றால் பின்னர் எப்போதுமே என்னால் பேசவே முடியாது எனவே தயவு செய்து நான் கூறுவதை கேளுங்கள் என கூறியுள்ளார். உடனே அனுமதி கொடுத்தார் ரஜினி.

Related Posts
1 of 72

அப்போது பேசிய அந்த ரசிகர், ”எனக்கு இப்போது 59 வயதாகிறது. ‘கழுகு’ படத்துல இருந்து நான் உங்க ரசிகரா இருக்கிறேன். அரசியலுக்கு வருவதும், வராமல் இருக்கிறதும் உங்க இஷ்டம் தான். நாங்க யாரும் உங்களை கட்டாயப்படுத்தலை. ஆனா, நீங்க ஒவ்வொரு தடவையும் இப்படி எதாவது சொல்லிட்டு போயிடுறீங்க.

நாங்க எல்லோருமே ஆளுக்கொரு கட்சியில் இருக்கிறோம். நீங்க சொல்றதை கேட்டு, எப்படியும் அரசியலுக்கு வந்துடுவீங்கன்னு ஏதாவது பேசிடுறோம். இருக்கிற கட்சியில் இருந்தும் எங்களை நீக்கிடுறாங்க. நான் அதிமுகவில் இருந்தேன். பாட்ஷா படம் வந்த சமயத்துல நீங்கப் பேசியதுக்கு ஆதரவாக ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டினேன். அப்போது என்னைக் கட்சியை விட்டு நீக்கிட்டாங்க. இப்போ நான் அங்கே இருந்திருந்தால், மாவட்டச் செயலாளர் ஆகி இருப்பேன்.

அதுக்குப் பிறகு நான் எந்த கட்சியிலும் சேரவே இல்லை. எப்படியாவது நீங்க அரசியலுக்கு வந்துடுவீங்க நம்ம கட்சியில் நாம செயல்படாலாம்னுதான் காத்திருந்தேன். ‘லிங்கா’ படம் ரிலீஸ் சமயத்துல நீங்கப் பேசினதை கேட்டு எப்படியும் கட்சி ஆரம்பிப்பீங்கன்னு நம்பினேன். ஆனால் நீங்கச் செய்யலை. இப்பவும் அதேபோல சொல்லி இருக்கீங்க.

எனக்கு நடிப்பு மட்டும்தான் வரும், அரசியலுக்கு எந்த காலத்துலயும் எந்தச் சூழ்நிலையிலும் வர மாட்டேன்னு பளிச்சுன்னு சொல்லிடுங்க. நாங்க யாரும் உங்களைக் கேட்கவே மாட்டோம். எதிர்பார்க்கவும் மாட்டோம். உங்க படம் வரும்போது பார்ப்போம். ப்ளக்ஸ் வைப்போம். கொடி கட்டுவோம். அத்தோட வேற வேலையை பார்த்துட்டுப் போயிடுவோம்.

இப்போ இருக்கும் சூழ்நிலையில் நீங்க கட்சி ஆரம்பிப்பீங்களா, பாஜக பக்கம் போவீங்களா, காங்கிரஸ் பக்கம் போவீங்களான்னு ஒரே குழப்பமா இருக்கு. எது எப்படியோ ஒரு தெளிவான முடிவை இப்பவாவது சொல்லுங்க. நாங்க எல்லாம் சின்ன பசங்க இல்லை. எல்லோருக்கும் வயசாகிடுச்சு. தாத்தா ஆகிட்டோம். இனியும் நீங்க ஒரு முடிவெடுக்கலைன்னா நாங்க எல்லோரும் இப்படியே போக வேண்டியது தான்.

என்று கண்கலங்கியபடியே அந்த ரசிகர் சொல்ல, அவரது பேச்சை கன்னத்தில் கைவைத்தபடி அமைதியாகக் கேட்ட ரஜினி ”சீக்கிரம் நல்லது நடக்கும்” என்று அந்த ரசிகரிடம் சொல்லி அனுப்பினாராம்.