கெத்து – விமர்சனம்
Rating : 3/5
சந்தானத்தை துணைக்கு வைத்துக் கொண்டு காமெடி ஹீரோ வேஷம் கட்டிக் கொண்டிருந்த உதயநிதி முதல்முறையாக ஆக்ஷன் பக்கமும் எட்டிப் பார்ப்போமே என்கிற துணிவோடு களமிறங்கியிருக்கும் படம் தான் இந்த ‘கெத்து’.
அப்பா உடற்பயிற்சி வாத்தியாராக வேலை பார்க்கும் பள்ளிக்கு எதிரே அண்ணனோடு சேர்ந்து கொண்டு ஒரு டாஸ்மாக் கடையை ஆரம்பிக்கிறார் வில்லன் மைம்கோபி.
அங்கு குடிப்பவனெல்லாம் பள்ளிக்கூட காம்பவுண்ட்டுக்குள் வாந்தியெடுத்து கிடக்க, கடையை அகற்றச் சொல்லி சத்யராஜ் தரப்பிலிருந்து போலீசுக்கு புகார் போகிறது.
இதற்கிடையே காசுக்காக தீர்த்துக் கட்டுகிற வேலையைச் செய்யும் தீவிரவாதி(?) விக்ராந்த்துக்கு ஒரு விஞ்ஞானியை கொலை செய்யச் சொல்லி உத்தரவு வருகிறது. அதை நிறைவேற்றும் பொருட்டு சத்யராஜ் இருக்கும் ஊரான குமுளிக்கு வருகிறார்.
சத்யராஜூக்கும், மைம்கோபிக்கும் மோதல் முற்றிய நிலையில் அடுத்தநாள் மைம்கோபி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். கொலைப்பழி சத்யராஜ் மீது விழ, செய்யாத கொலைக் குற்றத்திலிருந்து அப்பா சத்யராஜை மகன் உதயநிதி எப்படி மீட்டுக் கொண்டு வருகிறார்? என்பதே கிளைமாக்ஸ்.
முந்தைய படங்களை கம்பேர் செய்யும் போது டான்ஸ், ஆக்டிங்கோடு கூடுதலாக ஆக்ஷனிலும் பாஸ்மார்க் வாங்குகிறார் உதயநிதி. அப்படி இருந்தும் முகத்தில் தெரிகிற குழந்தைத் தனம் மாறாமல் இருப்பது தான் ‘அய்யோ பாவம்’ என்றாகிறது.
சுகுமாரின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில் கலர்ஃபுல்லாகத் தெரியும் எமி ஜாக்சன், இதர காட்சிகளில் ‘ப்ப்பா… யார்ரா இந்தப் பொண்ணு… என்று ரசிகர்களை கதற விடுகிறார். அதிலும் சவீதாவின் பின்னணிக்குரலில் லீப் மூவ்மெண்ட் கொடுக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார். சில காட்சிகளில் குறும்புத்தனம் செய்கிறேன் பேர்வழி செய்யும் எக்ஸ்பிரசன்கள் அடங்கப்பா…? எதுக்கு சம்பளமும் கொடுத்து சரியாக லிப் மூவ்மெண்ட்டும் கொடுக்க முடியாத ஒருவரை நடிக்க சொல்லி கஷ்டப்பட வேண்டும் என்று தெரியவில்லை.
பொறுப்புள்ள, ஜாலியான அப்பா, டீசண்ட்டான உடற்பயிற்சி ஆசிரியர் என மிதமான நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சத்யராஜ்.
ராஜேஷ் ஏதோ பழைய படங்களில் கெட்டப் போட்டது போல வருகிறார், உதயநிதியின் நண்பராக வரும் கருணாகரன் காமெடி செய்வதை விட கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் தப்பிக்கிறார்.
தீவிரவாதியாக வரும் விக்ராந்த் படத்தின் எந்த சீனிலும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. அமைதியாக வருகிறார்… வலது, இடது, கீழே, மேலே என எல்லா திசைகளிலும் கோபமாகப் பார்க்கிறார். நேராகப் பார்த்து துப்பாக்கியை குறி வைக்கிறார்…. கிளைமாக்ஸில் எதிர்பார்த்தபடியே உதயநிதியிடம் சண்டைப்போட்டு தோற்றுப் போகிறார். விக்ராந்த்தை பயன்படுத்த வேண்டிய ‘அளவு’ நன்றாகத் தெரிந்திருக்கிறது. அந்த அளவுக்குள்ளாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
சுகுமாரின் ஒளிப்பதிவில் இவ்வளவு பச்சை பசேல் என்கிற ‘குமுளி’யைப் பார்ப்பது ஆச்சரியம் தான். அதே சமயத்தில் எதற்கெடுத்தாலும் மரத்தில் தொங்கிக் கொண்டு கேமராவை டாப் ஆங்கிளில் வைப்பது பழக்க தோஷத்தை அடுத்தடுத்த படங்களில் விட்டொழிப்பது நல்லது.
ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் ‘தில்லு முல்லு’, ‘தேன் காற்று’ பாடல்கள் ரிப்பீட்டஸ் ட்யூன்ஸ்! பின்னணி இசையில் ரிலீஸ் அவசரம் அப்பட்டமாகத் தெரிகிறது. இப்படி பின்னணி போடவா ஓவரா…. டைம் எடுத்துக்கிறீங்க ஹாரீஸ்?
உதயநிதி இந்த ஆக்ஷன் ஏரியாவுக்கு பழக்கமில்லாதவர் என்பதால் அவராலும் ஒரு லெவலுக்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை.
டெக்னிக்கலா நல்ல சவுண்ட்டு உள்ள ஆளாகத் தெரிகிறார் இயக்குநர் திருக்குமரன். ஆனா படத்தோட வசூலுக்கு அது மட்டுமே போதுமாங்கிறது அவருக்கே வெளிச்சம். ‘மான் கராத்தே’வைப் போலவே இதிலும் தொழில்நுட்ப விஷயங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தியவர் கதை, திரைக்கதை, வசனம் போன்ற இடங்களில் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டிருக்கிறார்.
கெத்து – வெத்து வீராப்பு