இணையதளம் – விமர்சனம்
RATING : 2.2/5
சோஷியல் மீடியாவே சந்தோஷ உலகமென்று விழுந்து கிடப்பவர்களை கொஞ்சமல்ல ரொம்பவே ”உஷாரா இருங்கப்பா” என்று மூளைக்குள் சூட்டை ஏற்றும் இன்னொரு சைபர் கிரைம் இன்வெஷ்டிகேஷன் வகையறா படம் தான் இந்த ”இணையதளம்.”
கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ் மூவரும் சைபர் கிரைம் அதிகாரிகள்.
ஒருநாள் அலுவலகத்தில் கண்காணித்துக் கொண்டிருக்கும் இணையதளங்களில் ஒன்றில் டெல்லிகணேஷ் படுத்திருப்பது போல் ஒரு லைவ் வீடியோ ஓடிக்கொண்டிருக்க, கூடவே விரைவில் இவர் கொலை செய்யப்படப்போகிறார் என்கிற தகவலும் காட்டப்படுகிறது. அதாவது அந்த இணையதளத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவர் கொலை செய்யப்படும் நேரமும் நெருங்கும்.
இப்படி வித்தியாசமான புரோகிராம் செய்யப்பட்ட, அதுவும் மனிதர்கள் கொலை செய்யப்படும் விதத்தை லைவ்வாகக் காட்டும் இணையதளத்தை நடத்துவது யார்? இப்படிப்பட்ட கொடூரமான அந்த வேலையைச் செய்வது யார்? என்று போகும் விசாரணையில் சைபர்கிரைம் அதிகாரிகள் மூவரும் குற்றவாளியை நெருங்கினார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
தொழில்நுட்ப வளர்ச்சி சமூக முன்னேற்றத்துக்கு பெரும் உதவியாக இருக்கின்ற அதே சமயத்தில் அதைப் பயன்படுத்தி செய்யப்படுகிற குற்றங்களையும், அதை செய்பவர்களை நெருங்குவதும் எவ்வளவு கடினம் என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
சைபர் கிரைம் அதிகாரியாகவும், ஹீரோவாகவும் வரும் கணேஷ் வெங்கட்ராமின் உசரத்துக்கு போலீஸ் அதிகாரி கேரக்டர் செம பொருத்தம். அதே உசரத்துக்கு பொருத்தமாக புழுதிபறக்க இரண்டு ஸ்டண்ட் ”பரபர” காட்சிகளை சேர்த்திருந்தால் ”சிறப்பு” என்றாகியிருப்பார்.
இன்னொரு அதிகாரியாக வரும் ஸ்வேதா மேனன் வயசு ஏறினாலும் அது தெரியாத வண்ணம் முகத்தில் மேக்கப்பை எஸ்க்ட்ராவாக அப்பிக் கொண்டு அழகு குறையாமல் காட்சியளிக்கிறார்.
சைபர் கிரைம் அதிகாரியாக எப்படியாவது அந்தத் துறையில் சாதிக்க வேண்டுமென்கிற கனவோடு வருகிற ‘சின்னத்திரை’ ஈரோடு மகேஷின் முடிவு பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறது. வளா வளா என்றில்லாமல் அளந்து பேசுகிற அவருடைய டயலாக்குகளில் சில ரசிக்க வைக்கின்றன, சில சிரிக்க வைக்கின்றன. அதிலும் அந்த வீணை வாசிக்கிற காட்சியில் மொத்த தியேட்டரும் ”வாய் கொள்ளா” சிரிப்பு சிரிக்கிறது!
யாராக இருக்கும் அந்த லைவ் டெக்னாலஜி வில்லன்? என்று பார்த்தால் கிளைமாக்ஸ் நெருங்கும் போது வில்லியாக எண்ட்ரி கொடுக்கிறார் மாஜி நடிகை சுகன்யா. புன்னகை முகமாக அறிமுகமாகி, கோபக்கனல் காட்டி, அழுது புலம்பி, கொலை வெறித்தனம் காட்டி என நடிப்பின் பல லேயர்களை சில காட்சிகளில் காட்டி விடுகிறார்.
அரோல் கரோலியின் பின்னணி இசை சுமாராக இருந்தாலும், கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவு அந்தக் குறையை சரி செய்து விடுகிறது.
ஒரு பிரமாதமான நாட் கிடைத்து விட்டது என்றதும் நாமே இயக்கி விடுவோம் என்று இறங்கி விட்டார்கள் போல இப்படத்தின் இரட்டை அறிமுக இயக்குநர்கள் சங்கர் – சுரேஷ். ஒரு இணையதளத்தை ஹேக் செய்வது எப்படி? ஹேக் செய்யப்பட்டால் அதிலிருந்து மீள்வது எப்படி? எங்கோ ஒரு மூலையில் இயங்கும் இணைய தளத்தை ஈஸியாக நெருங்குவது எப்படி? போன்ற இணைய உலக விஷயங்களை தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அதிலும் சில ஐடியாக்களை சென்சார் ஆசாமிகள் மியூட் செய்திருக்கிறார்கள்.
இருபத்தி நான்கு மணி நேரமும் இணையதளமே கதியென்று கிடப்பவர்களை ”கொஞ்சம் அடக்கியே வாசிங்கப்பா” என்று எச்சரிக்கும் விதமாக தர நினைத்தவர்கள் நாடகத்தனம் நிறைந்த சில காட்சிகளுக்கும், கோர்வையாக இல்லாத ஒன்றிரெண்டு காட்சிகளுக்கும் கத்தரி போட்டு கொஞ்சம் ‘ஷார்ப்’ ஆக்கியிருந்தால் எக்கச்சக்க லைக்குகளையும், ஷேர்களையும் அள்ளியிருக்கும்!