சுந்தர் சி நடிக்கும் பேயே இல்லாத ஹாரர் படம் ‘இருட்டு’
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் சி நடிப்பில் வி.இசட் துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் ”இருட்டு”. இப்படம் இதுவரை நாம் யாரும் கண்டிடாத புது வகை ஹாரர் திரைப்படமாக இருக்கும்.
சுந்தர் சி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஹாரர் காமெடி படமான ‘அரண்மனையின்’ இரண்டு பாகங்களையும் சுந்தர் சி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் புதுமையான டார்க் ஹாரர் படமாக இருக்கும். முகவரி, நேபாளி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் போன்ற கல்ட் படங்களை இயக்கிய வி.இசட் துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ”ஆம், இது புதுமையான ஹாரர் படம் தான். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன் என்றார்.
படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் ஊட்டியில் வைத்து நடைபெற்றது. இன்னும் படத்தின் சில காட்சிகள் ஹைராபாத் மற்றும் சூரத்தில் நடைபெறவுள்ளது.
படத்தில் சுந்தர் சி உடன் தன்ஷிகா , சாக்சி பர்வீந்தர் , வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.