தமிழ் இலக்கியச் செம்மல் விருது பெற்ற கபிலன்வைரமுத்து!

Get real time updates directly on you device, subscribe now.

ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளி வந்த நாவல் ஆகோள். பொதுமக்களைக் குற்றவாளிகளாக நடத்தும் போக்கு இன்றளவும் உலக அரசியலில் இருக்கிறது என்ற கருத்தை ஒரு டைம் டிரேவல் கதைவழி சொல்லிய புத்தகம். ஆகோள் ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதனிடையே ஆகோள் நாவலின் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் இந்தாண்டு வெளியானது. எதிர்காலத்தில் அறிவியலின் துணை கொண்டு அதிகார மையங்கள் மக்களின் சிந்தனைகளை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தக்கூடும் என்பதை மாக்கியவெல்லி காப்பியம் பேசியிருக்கிறது. குற்றப்பரம்பரை சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மதுரை எட்டு நாடுகளின் வரலாறு இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகோள் மற்றும் மாக்கியவெல்லி காப்பியம் நூல்கள் பாவை கல்வி நிறுவனங்களின் சிறந்த அறிவியல் புதினம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு கபிலன்வைரமுத்துவுக்கு தமிழ் இலக்கியச் செம்மல் விருது வழங்கப்பட்டது. தற்போது கபிலன்வைரமுத்து தன் இன்ஸ்டாகிராமில் ஆகோள் மூன்றாம் பாகத்திற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கியிருப்பதாக பதிவிட்டிருக்கிறார். இந்த நூல் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழில் ஒரு நாவல் மூன்று பாகங்களாக எழுதப்படுவது மிக அரிது. கபிலன்வைரமுத்துவின் முந்தைய நாவலான மெய்நிகரி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் என்ற திரைப்படமாக வெளிவந்தது. ஆகோள் நாவல்களும் திரைப்படங்களாகுமா ? குற்றப்பரம்பரை கதைகள் திரைக்கு வருவது கபிலன்வைரமுத்துவின் ஆகோள் மூலம் நிறைவேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.