‘பேய்ப்படமென்று நிரூபித்தால் நடிப்பதையே விட்டு விடுகிறேன்’ – சவால் விட்ட சந்தீப் கிஷன்
‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ படங்களை தொடர்ந்து கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘கண்ணாடி’.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஹீரோ சந்தீப் கிஷனே வாங்கியிருக்கிறார்.
ஏற்கனவே வெளியான படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரும் படம் பார்க்கும் ஆவலை கூடுதலாக தூண்டியிருக்கிறது.
ஜூலை 12-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தைப் பற்றி ஹீரோ சந்தீப் கிஷன் பேசியதாவது, கண்ணாடி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது.
இப்டத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம்.
‘மாயவன்’ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசடதபற’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது எல்லோராலும் பேசும்படமாக இருக்கும்.
எல்லோரும் பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். ஆகையால் எந்த பின்னணியில் எடுத்தால் வெற்றியாகும் என்று கூறினாலும், அதை விடுத்து நான் எப்போதும் வித்தியாசமாகத் தான் நடிப்பேன் என்று கூறுவேன்.
இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும்.
இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய் படம் என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்” என்றார்.