தமிழக விவசாயிகளும் துன்பத்தில் உள்ளனர் : கர்நாடகாவில் ஒலித்த கனிவுக்குரல்! #KaveriNammadu
காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு ஆதரவாக வந்ததும் பொறுக்க முடியாமல் வெறியாட்டம் நடத்தத் தொடங்கி விட்டார்கள் கன்னட அமைப்பினர்.
கடந்த சில தினங்களாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் வீதிகளில் இறங்கி தமிழகத்துக்கு எதிராக போராடி வரும் அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகிறார்கள்.
காவிரி விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் எதுவும் செய்வதற்கில்லை என்று விஷால் தலைமையிலான பாண்டவர் அணி ஒதுங்கிக் கொண்டது.
அதே சமயம் கர்நாடகாவில் நடிகர்கள் சிவராஜ்குமார், தர்ஷன், ரமேஷ் அரவிந்த், ஜக்கேஷ், உபேந்திரா, நடிகைகள் தாரா, ஸ்ருதி, ராகினி திவேதி, பாரதி விஷ்ணுவர்த்தன், லீலாவதி என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று பெங்களூரில் கன்னட நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலானோர் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் தாக்கி பேசுவதிலேயே குறியாக இருந்தனர்.
ஆனால் அத்தனை கனீர் குரல்களுக்கு மத்தியிலும் ஒரே ஒரு குரல் மட்டும் கனிவுக் குரலாக மாறியிருந்தது. நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவருமான சிவராஜ் குமாரின் குரல் தான் அது.
அவர் பேசுகையில் ”கர்நாடகா வாழ் தமிழர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும். எந்த மாநிலத்தில் இருக்கிறோமோ அந்த மாநிலத்தின் நலனை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும். சுதீப் வரவில்லை என்றாலும் அம்பரீஷ் வரவில்லை என்றாலும் பிரச்சினையில்லை., திரையுலகை சேர்ந்த ஒருவர் வந்தாலும் அது பிறர் வந்ததற்கு சமம்தான். எனவே திரையுலகினரை குறை சொல்லாதீர்கள்.
நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு சரியில்லை. நல்லவர்களை ஆளுவதற்கு தேர்ந்தெடுங்கள். அல்லது வாக்களிக்க போகாதீர்கள். பங்காரப்பா முதல்வராக இருந்தபோது, கர்நாடகா நன்மைக்காக திடமான முடிவுகளை எடுத்தார். இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் “ஜெயலலிதா எப்போது பார்த்தாலும் இப்படியே செய்து கொண்டிருக்கிறார்…” என கூறி அவரைப்பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதை கேட்ட சிவராஜ்குமார் பொதுக்கூட்ட மேடையில் இருந்தபடியே அதை கண்டித்தார்.
தொடர்ந்து பேசுகையில், எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும், பெண் என்பவர் பெண் தான். எனவே இப்படி தரக்குறைவாக பேசும் வேலையை வைத்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாடு நமது பக்கத்து மாநிலம் தான். 1500 கி.மீ தொலைவிலுள்ள வேறு நாடு கிடையாது. நாம் இந்தியர்கள் என்ற ஒற்றுமை மனப்பான்மை நமக்கு வர வேண்டும். கர்நாடகாவைப் போன்றே தமிழகத்திலும் விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர். ஒரு விவசாயியின் கஷ்டம் மற்றொரு விவசாயிக்கு நன்கு தெரியும். எனவே இரு தரப்பும் பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவ்வாறு சிவராஜ்குமார் பேசினார்.