கூட்டாளி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 1.8/5

நடித்தவர்கள் – சதீஷ், கிரிஷா க்ரூப், கல்யாண், அருள் தாஸ், உதயபானு மகேஷ்வரன், அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ், நந்தகுமார் மற்றும் பலர்

இசை – பிரிட்டோ மைக்கேல்

ஒளிப்பதிவு – சுரேஷ் நடராஜன்

இயக்கம் – எஸ்.கே.மதி

வகை – ஆக்‌ஷன், த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 16 நிமிடங்கள்

கூட்டாளியாகச் சுற்றும் நான்கு நண்பர்களில் ஹீரோவுக்கு காதல் வருகிறது. வேண்டாம் என்று எச்சரித்தும் அதை மீறி காதல் மயக்கத்தில் தன்னையே மறக்கும் ஹீரோவால் நான்கு பேருக்கும் ஏற்பட்டும் ஒரு பிரச்சனையிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த ‘கூட்டாளி.’

மார்வாடியிடம் தவணை முறையில் கார்களை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தத் தவணையை கட்டாத அரசியல் வாதிகள் உள்ளிட்ட பெரிய கைகளின் கார்களை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வருவது தான் ஹீரோ சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகளின் பிரதான வேலை.

Related Posts
1 of 44

முதலாளி கொடுக்கும் தைரியத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த வேலையைச் செய்யும் சதீஷ் அரசியல்வாதியின் காரை எடுத்து விட அவரது கோபத்துக்கு ஆளாகிறார். தொடர்ந்து எதிரிகள் எண்ணிக்கை அதிகரிக்க, கூடவே ஹீரோயின் கிரிஷா க்ரூப்பின் காதலும் கிடைக்கிறது.

அந்தக் காதலை கூட்டாளிகளில் ஒருவன் எதிர்க்க, அதையும் மீறி கிரிஷா க்ரூப்புடன் காதலைத் தொடரும் சதீஷும் அவரது கூட்டாளிகளும் அந்தக் காதலாலேயே பிரச்சனை ஒன்றில் சிக்குகிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.

விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்தின் கதையும், அதில் ஹீரோ விக்ரமின் கேரக்டரும் கிட்டத்தட்ட இதே தான். அதில் நடித்த அருள்தாஸ் இதிலும் இருக்கிறார். ஆக இரண்டு படங்களின் கதையும் ஒன்று தான்.

‘அழகி’ படத்தில் சிறு வயது பார்த்திபனாக வந்த சதீஷ் தான் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவரது கூட்டாளிகளாக கலையரசன், அப்புக்குட்டி, அன்புராஜ் ஆகியோர் படு மோசம் என்று சொல்கிற அளவுக்கு இல்லாமல் முடிந்தவரை இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

அழகு குட்டிச் செல்லம் படத்தில் அறிமுகமான கிரிஷா க்ரூப் தான் இந்தப் படத்தில் நாயகியாக வருகிறார். ஹீரோவை விட முகத்தில் வயசு வித்தியாசம் அதிகம் தெரிகிறது. முதல் படத்தில் கிடைத்த கனமான கதாபாத்திரம் இதில் இல்லாததால் நடிப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விஷயமென்று எதுவுமில்லை.

மார்வாடியாக வரும் உதயபானு மகேஷ்வரன் அந்தக் கேரக்டரில் ஒட்டவே இல்லை, ஏரியா தாதாவாக வரும் நந்தகுமார் அதிகம் அலட்டாமல் வருகிறார். பல படங்களில் வருவதைப் போலவே இதிலும் அதே ரெளடி கேரக்டரில் வருவதால் நடிப்பில் எந்த மெனக்கிடலும் செய்யாமல் வந்து போகிறார் அருள்தாஸ்.
போலீஸ்காரராக வரும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார்.

சுரேஷ் நட்ராஜனின் ஒளிப்பதிவில் வழக்கமான வட சென்னையை பார்க்க முடிகிறது. பிரிட்டோ மைக்கேல் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்.

அடுத்தடுத்து காட்சிகள் எப்படி நகரும் என்று முன்பே நம்மா யூகிக்க முடிவதால் திரைக்கதையில் சுவாரஷ்யம் குறைகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே வெளியான ஸ்கெட்ச் படத்தின் கதை என்பதால் படத்தை தொடர்ந்து ரசிக்கும் ஆர்வம் குறைகிறது.

பிரிட்டோ மைக்கேலின் இசையில் பாடல்களும் ரொம்பவே சுமார். சென்னையின் குப்பத்து பகுதிகளை உள்ளது உள்ளபடியே ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுரேஷ் நடராஜன். இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் வரை எந்தவித திருப்பமும் இல்லாமல் மெதுவாக நகரும் கதை, போலீஸ்காரர் கல்யான் எண்ட்ரிக்குப் பிறகு கொஞ்சம் வேகம் எடுக்கிறது.

காரைப் பாதுகாக்க சம்பளம் கொடுத்து ஆள் போடும் ஏரியா கவுன்சிலரால் ஒரு மாத தவணையைக் கூட கட்ட முடியாதா? என்கிற கேள்வியே திரைக்கதையின் அப்பட்டமான சொதப்பல்!

இப்போதிருக்கும் கவுன்சிலர்கள் எல்லாம் தவணையில் கார் வாங்குகிற அளவுக்குத்தான் நேர்மையாக சம்பாதிக்கிறார்களா என்ன? எந்த  நாட்ல வாழ்றீங்க டைரக்டர் சார்?