மாயநதி-விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மாயநதி கவித்துமான டைட்டிலோடு வந்திருக்கும் கருத்துள்ள படம். ஒரு பெண் தனது படிப்பில் எவ்வாறு கவனம் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், அவளின் கவனத்தை எவையெல்லாம் சிதறடிக்கும் என்பதையும் மிக அழகாக பதிவுசெய்துள்ளார் அறிமுக இயக்குநர் அசோக் தியாகராஜன்.

படத்தின் நாயகி வெண்பா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் வெண்பாவிற்கு படிப்பு முதல் தெய்வமாய் இருக்க..இடையே ஒரு காதல் வந்து அச்சுறுத்துகிறது. அப்பாவின் எச்சரிக்கையையும் மீறி அவள் காதல் வயப்பட அடுத்து என்னானது என்பது தான் படத்தின் கதை.

அபி சரவணன் ஹீரோ என்றாலும் நம் மனதில் மிக அற்புதமாக வந்து அமர்வது ஹீரோயின் வெண்பா தான். மிக அசாத்தியமாக நடித்துள்ளார். குட்டிக் குட்டி அசைவுகளிலும் அந்தக் கதாப்பாத்திரத்தின் ஜீவனை கடத்தி இருக்கிறார் . வெல்டன்! அபி சரவணன் ஓ.கே ரகம். அடுத்ததாக படத்தில் நம் நெஞ்சை கணக்கச் செய்பவர் ஆடுகளம் நரேன். மிகச்சிறந்த நடிப்பு.
அபி சரவணனின் நண்பனாக வரும் அப்புக்குட்டி அடிக்கும் காமெடிகளை விட அவரின் குணச்சித்திர நடிப்பு அட போட வைக்கிறது. கூடவே இன்னொரு நண்பனாக வரும் கார்த்திக் ராஜா மிக எதார்த்தமாக நடித்துள்ளார். பையன் அழகாகவும் இருக்கிறார்

Related Posts
1 of 8

பவதாரிணி பின்னணி இசையில் தந்தை இளையராஜாவை சில இடங்களில் நினைவூட்டி அசத்துகிறார். படத்தின் ஒளிப்பதிவும் ரம்மியம். கனமான கதை என்ற போதும் கமர்சியலுக்காக முன்பாதியில் பாடல்களை வலிந்து வைத்திருக்கிறார்கள். அவை இல்லாவிட்டாலும் ஒரு குறையும் இருந்திருக்காது.

படத்தில் லாஜிக் கேள்விகள் பெரிதாக இல்லை என்றாலும் சில இடங்களில் திரைக்கதையில் சின்ன ஜம்ப் தெரிகிறது. ஆனாலும் இந்தப்படம் நிச்சயம் வரவேற்க வேண்டிய படம்.

ஒரு கனவை நோக்கிப் பயணிக்கும் போது சில தடைகள் படையெடுத்து வரத்தான் செய்யும். அதுவும் பெண்களுக்கு அதிகமாக வரும். அதைத் தாண்டுவதில் தான் வெற்றி இருக்கிறது. இந்தப்படத்தின் இயக்குநருக்கும் இது பொருந்தும்..அவர் இயற்கையில் ஒரு மருத்துவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். அவரின் இலக்கு திரையில் தெளிவாக இருந்ததால் படத்தில் உள்ள சின்ன சின்ன தடைகள் பெரிதாகத் தெரியவில்லை. அந்த வகையில் இந்த மாயநதி -தூயநதி
3/5