”கதை அமைந்தால் ஹீரோ தான்…” – நட்சத்திர விழாவை அதிர விட்ட சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!
நடிகர் சங்கத்தைக் கட்டுவதற்காக சென்னையில் கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டிய விஷால் தலைமையிலான நடிகர் சங்கத்தினர் மீதி பணத்தை திரட்டுவதற்காக இந்த முறை மலேசியாவில் பிரம்மாண்டமான நட்சத்திர விழாவை நடத்தினார்கள்.
கலை விழாவோடு நட்சத்திர கிரிக்கெட்டும் சேர்ந்து நடத்தி மலேசிய ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்த நட்சத்திர கூட்டத்தில் தமிழ்சினிமாவின் இரண்டு மாபெரும் ஹீரோக்கள் ரஜினியும், கமலும் ஒன்றாக கலந்து கொண்டது ரசிகர்களை உச்சபட்ச சந்தோஷத்தில் ஆழ்த்திய நிகழ்வு.
இருவரையும் கிரிக்கெட் போட்டி நடந்த அரங்குக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அங்கிருந்த ரசிகர்களுக்கு வானளாவிய தரிசனத்தைக் கொடுத்தார்கள்.
விழாவில் பேசிய ரஜினி ”என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நான் எதையாவது செய்ய வேண்டும் என்றவர் மலேசியா என் இரண்டாவது தாய் வீடு” என்று மனம் உருகப் பேசி மலேசிய ரசிகர்களை ஐஸ் வைத்தார்.
”நல்ல திறமைசாலிகளைத் தான் தேட வேண்டும், அதை விட்டுவிட்டு தலைமையைத் தேடக்கூடாது” என்று அங்கும் அரசியல் பேசினார் கமல்ஹாசன்.
என்ன தான் தமிழ்சினிமாவின் இரு துருவங்கள் கலந்து கொண்டாலும் விழா முழுக்க எல்லோருடைய பார்வையையும் உறுத்தியது சரவணா ஸ்டோர் முதலாளி எஸ்.எஸ்.எஸ் சரவணனின் பங்களிப்பு தான்.
மலேசிய ரசிகர்கள் கொடுத்த டிக்கெட் விலை நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு போதுமானதாக இருக்காது என்று தெரிந்தும், விழாவை நடத்தியதே இவர் கொடுக்க ஒப்புக் கொண்ட நன்கொடையால் தான்.
ஆமாம், விழாவில் சிறப்பு அழைப்பாளராகவும், ஸ்பான்சராகவும் கலந்து கொண்ட சரவணன் தன் பங்களிப்பாக நடிகர் சங்கத்துக்கு சுமார் இரண்டரை கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார்.
ஏற்கனவே தனது கடை விளம்பரங்களில் தமன்னா, ஹன்ஷிகாவுடன் நடித்துத் தள்ளும் அண்ணாச்சியிடம் சினிமாவில் நடிப்பீர்களா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறது மலேசிய ஊடகம் ஒன்று. அதற்கு பதிலளித்த அண்ணாச்சி “நல்ல கதை அமைந்தால் நிச்சயம் படங்களின் நடிப்பேன்” என்று பதில் சொல்லி அசர வைத்திருக்கிறார்.
‘பவர் ஸ்டார்’ வரிசையா? ‘சூப்பர் ஸ்டார்’ வரிசையா?