மரகத நாணயம் – விமர்சனம்
RATING : 3.5/5
சிரித்து சிரித்து ரசிக்க ஃபேண்டஸி கம் காமெடிப்படமாக ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ”மரகத நாணயம்.”
கடன் பிரச்சனையால் தத்தளிக்கும் ஹீரோ ஆதி அதிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படும் அவர் நண்பன் டேனியல் சிபாரிசில் கடத்தல் தொழிலைச் செய்யும் முனீஸ்காந்த்திடம் வேலைக்குச் சேர்கிறார்.
சின்னச் சின்னதாய் கடத்தல் தொழிலைச் செய்து எப்போது தன்னுடைய கடனை அடைப்பது என்று யோசிக்கும் ஆதி பெரிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசிக்கிறார். அந்த நேரத்தில் தான் விலை மதிக்க முடியாத அரசர் காலத்து மரகத நாணயம் ஒன்றை தேடித்தரும் வேலை வருகிறது.
அதற்காக சாமியார் கோட்டா சீனிவாசராவ் ஆலோசனையின் படி அதை ஏற்கனவே தேடிப்போன 132 பேர் இறந்து போனவர்களில் நிக்கி கல்ராணி, முனீஷ்காந்த், அருண்ராஜா காமராஜா, சங்கிலி முருகன் ஆகிய நான்கு ஆவிகளை துணைக்கு வைத்துக் கொண்டு கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார்.
அவர் ஒரு பக்கம் தேடிப்போக, ஆனந்தராஜ் கும்பல் இன்னொரு பக்கம் தேட ”மரகத நாணயம்” யாருக்கு கிடைத்தது? என்பதே கிளைமாக்ஸ்.
ஆதியின் கட்டுமஸ்த்தான உடம்புக்கு பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படம் தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றினாலும் இதில் கதையோடு ஒன்றிப்போன கேரக்டரில் நம்மை ரசிக்க வைக்கிறார். தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழில் கேப்பே விழ வாய்ப்பில்லை.
நாயகி நிக்கி கல்ராணி ஏதோ வந்தோம் போனோம் என்றில்லாமல் ட்விஸ்ட்டோடு வரும் அவருடைய கேரக்டர் செம அசத்தல். அதிலும் எதுவுமே பேசாமல் அமைதியாக வரும் நிக்கி ஏன் அப்படி இருக்கிறார்? என்று யோசிக்கும் போது அந்த சஸ்பென்ஸ் உடைகிற இடம் எதிர்பாராதது. ஆவியான பிறகு நிக்கியின் நடிப்பு மிரட்டல்.
படத்தில் பாராட்டி ஆக வேண்டிய இன்னும் இரண்டு பேர் முனீஷ்காந்த்தும், டேனியும் தான். இருவருமே செய்யும் சேட்டைகளும், அடிக்கும் லூட்டிகளும் காமெடிக்கு கியாரண்டி. கடத்தல் செய்யும் போதெல்லாம் சொல்லிக்கொள்ளும் ரகசியக் குறியீடு வார்த்தைகளில் ஆரம்பித்து சின்னச் சின்ன சீன்களில் கூட நம்மை சிரிக்க வைக்கிறார்கள். இவர்கள் ஒரு பக்கம் வயிறு வலிக்க சிரிக்க வைத்தால் ஆனந்தராஜூம் அவரது கூட்டாளிகளும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்க நம் வயிறு எக்ஸ்ட்ராவாக புண்ணாகிறது.
திபு நைனன் தாமஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் எரிச்சல் இல்லாமல் படத்தை ரசிக்க வைக்கிறது. பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவும், ராகுலின் கலை வடிவமைப்பும் சிறப்பாக கை கொடுத்திருக்கின்றன.
லாஜிக் விஷயங்களைத் தாண்டி பில்லி, சூனியம், கத்தி, ரத்தம் என்கிற ஆவிப்பட ஃபார்முலாவில் யோசிக்காமல் குழந்தைகளுடன் சேர்ந்து படத்தோடு ஒன்றிப்போய் மனசு விட்டு சிரிக்க வைக்கும் குதூகலப் படமாகத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன்.
கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கக் கொடுக்கிற ஒவ்வொரு ‘நாணயத்துக்கும்’ உண்மையான மதிப்புள்ள படம்!