“மௌன வலை” படத் துவக்க விழாவை ஆர்கானிக் விழாவாக மாற்றிய ஆரி !
வலம்புரி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜ சேகர்.எஸ் தயாரிக்கும் மௌனவலை திரைப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கதாநாயகன் ஆரி , இயக்குநர் பெஸ்ட் ராபர்ட் , தயாரிப்பாளர் ராஜசேகர் , கதாநாயகி ஸ்ம்ருதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஜாகுவார் தங்கம் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
வழக்கமாக நடைபெறும் பட பூஜை மற்றும் துவக்க விழா போல் இல்லாமல் ”மௌன வலை” திரைப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா தனித்துவமாகவும் நாம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமைந்தது. விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வழக்கமான உணவு வழங்கப்படாமல் ஆர்கானிக் உணவு வழங்கப்பட்டது.
உணவே மருந்து என்பதற்கு ஏற்றவாறு வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்ககூடிய உணவு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக சில்வர் தம்ப்ளர் வழங்கப்பட்டது. அந்த தம்ப்ளர் தண்ணீர் பருகிவிட்டு அவரவர் தங்களுடைய வீட்டிற்கு எடுத்து செல்வதற்காக வழங்கப்பட்டது. நடிகர் ஆரி தன்னுடைய மாறுவோம் மாற்றுவோம் அமைப்பின் மூலம் வந்திருந்தோர் அனைவருக்கும் உணவு பற்றியும் , விவசாயம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதற்காக இந்த விஷயங்களோடு மேலும் பல நல்ல விஷயங்களை ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவில் பிரபல டாக்டர் சுல்தான் கலந்து கொண்டு ஆர்கானிக் உணவின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் விவசாயத்தின் இன்றியமையாமை பற்றியும் விளக்கி கூறினார். காவல்துறை டி.எஸ்.பி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு விவசாயம் பற்றியும் தமிழர்கள் மறந்த நல்ல பழக்க வழக்கங்கள் பற்றியும் பேசினார். நடிகர் சாந்தனு பேசும் போது பிளாஸ்டிக் பொருட்களை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் கூறினார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து என்னென்ன விஷயங்களை பயன்படுத்துகிறார்கள் அது எந்த வகையில் நல்லது என்பது பற்றியும் கூறினார்.
இறுதியாக நடிகர் ஆரியின் ”மாறுவோம் மாற்றுவோம்” அமைப்பு பற்றிய ஆவன படம் ஒன்று திரையிடப்பட்டது. அதன் பின்னர் பேசிய ஆரி பிளாஸ்டிக்கை நாம் ஏன் ஒழிக்க வேண்டும் என்பது பற்றியும். அதற்கு மாற்றாக என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் விளக்கி பேசினார். அதுமட்டுமின்றி ஆர்கானிக் உணவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் பேசினார். ஆரியின் மௌனவலை திரைப்படம் த்ரில்லர் படமாக இருந்தாலும். திரைப்படத்தின் துவக்க விழா அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது என்று விழாவுக்கு வருகைதந்த அனைவரும் பாராட்டினர்.