முத்தையா முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு
இலங்கையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இதில் அவர் முத்தையா முரளிதரனாகவே நடிக்கிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகப் போகிறது.
இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
”கண்டிப்பாக முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிப்பது எனக்கு சவாலாகவே இருக்கும். இந்த சவாலை நான் ஆவலோடு எதிர் கொள்ளப் போகிறேன்” என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த முத்தையா முரளிதரன், ”விஜய் சேதுபதி ஒரு சிறந்த நடிகர். அவர் என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் போவதை பெரும் கெளரவாகக் கருதுகிறேன். மேலும் இந்தப் படக்குழுவோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு பெரு மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும் என்று உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
முத்தையா முரளிதரன் என்றுமே சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர். எப்போதுமே அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நின்றவரில்லை. அதுமட்டுமல்ல அவர் சிங்கள மொழியை மட்டுமே பேசுபவர். மறந்தும் கூட தமிழ் மொழியில் பேச மாட்டார். இப்படி ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நாங்கள் மிகவும் நேசிக்கும் மறத்தமிழரான விஜய் சேதுபதி நடிப்பது சரியல்ல. கண்டிப்பாக அவர் அந்த கேரக்டரில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்ப்படங்களின் வெளிநாட்டு வசூலில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஈழத்தமிழர்கள் தான். இப்போது அவர்களே இந்தப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் விஜய் சேதுபதி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.