தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : நிலைப்பாட்டை அறிவித்தது நடிகர் சங்கம்

திருட்டு விசிடியைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தேர்தலில் போட்டியிட்டு நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போல தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் போட்டியிட்டு தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றுவோம் என்று விகடன் வார இதழுக்கு பேட்டி கொடுத்தார் விஷால்.
அன்றைய தினம் முதல் நடிகர் சங்க நிர்வாகிகளை தயாரிப்பாளர் சங்கத்தினர் கண்டித்து வருகிறார்கள். குறிப்பாக விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் வரை அவர் படங்களுக்கு எந்த தொழில் ஒத்துழைப்பும் கொடுக்கப்போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
ஆனாலும் இந்த தேர்தல் விவகாரத்தில் ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் சம்பந்தப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியானது.
இதற்கிடையே இந்த செய்திகள் குறித்து தங்களது நிலைப்பாட்டை இன்று அறிக்கை மூலம் அறிவித்திருக்கிறது நடிகர் சங்கம்.
அந்த அறிக்கையில் ”கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபடி உள்ளன. அது பற்றி எங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த கடந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்பது மிகப்பெரிய அமைப்பு. திரை உலகின் முதுகெலும்பு போன்ற அதனது தலைமையை தீர்மானிக்க வேண்டியது அதை சார்ந்த உறுப்பினர்கள்தான். அதில் ஓட்டுரிமை இல்லாத தென்னிந்திய நடிகர் சங்கம் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிடாது.
ஆனால் அதே சமயம் – எங்களது உறுப்பினராக உள்ள நடிகர்கள் மற்றும் தற்போதைய நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ள நடிகர்கள் பலரும் தங்களது சங்கத்தில் தயாரிப்பாளர்களாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவர்களின் நிலைப்பாடு மற்றும் ஊடக பேட்டி தேர்தல் பற்றி அவர்கள் எடுக்கும் முடிவுகளை தயாரிப்பாளர் சங்க உறுப்பினராக கருதியே அணுகவேண்டும்.
நடிகர் சங்கத்துடன் அதை தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தொடர்புப்படுத்தி பேசுவதை தவிர்க்கும்படி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
தயாரிப்பாளர் சங்கம் சுதந்திரமாக தேர்தலை நடத்தி – அதன்மூலம் வரும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம்.இதுவே எங்கள் நிலைப்பாடு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.