பச்சைக்கொடி காட்டினார் நாகர்ஜூன்! : சமந்தாவுக்கு ஜனவரி 29-ல் நிச்சயதார்த்தம்
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த சில மாதங்களாகவே ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்கிற தகவல் அரசல் புரசலாக திரையுலகில் பேசப்பட்டு வந்தது.
வழக்கம் போல காதலில் விழுந்த நடிகைகள் முதலில் மறுத்து பின்னர் ஆமாம் சாமி போடுவது போல சமந்தாவும் அந்தக் காதல் ரகசியத்தை முதலில் மறுத்து பின்னர் ஆமாம் என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.
இதற்கிடையே சமந்தாவுடனான காதலுக்கு நாக சைதன்யா வீட்டில் எதிர்ப்பு வந்ததாகவும் செய்திகள் பரவியது.
இதனால் ஏற்கனவே சித்தார்த்தை காதலித்த போது அவர்கள் குடும்பத்தோடு திருப்பதிக்கெல்லாம் சென்று சாமி கும்பிட்டு வந்த சமந்தா விரைவில் அவரையே திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று பிரிந்தார்.
அதுபோலவே நாக சைதன்யாவுடனான காதலும் அவர் வீட்டாரின் எதிர்ப்பால் புட்டுக்கொள்ளுமோ? என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது. நல்லவேளையாக சமந்தா – நாக சைதன்யா திருமணத்துக்கு அப்பா நாகர்ஜுனும், அம்மா அமலாவும் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள்.
அது உண்மை தான் என்பது போல சென்ற வாரம் நாக சைதன்யாவின் தம்பியான அகில் அக்கினேனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதில் கலந்து கொண்டார் சமந்தா.
தம்பி அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வருகிற ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா – சமந்தா நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.
இப்படித்தான் நாக சைதன்யா – சமந்தா ஜோடியின் காதலை தெலுங்கு மீடியாக்கள் பரப்பிய போது முதலில் மறுத்தார்கள். கடைசியில் அது உண்மையாகிப் போனது. அதேபோல இந்த நிச்சயதார்த்த தகவலும் உண்மையாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
அதே சமயம் இந்த தகவலை அந்த ஜோடி ஒப்புக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.