புரமோஷன்களின் தலை காட்ட ஆரம்பித்தார் நயன்தாரா : ஏன் இந்த மாற்றம் தெரியுமா?

கதாநாயகர்களில் அஜித்தைப் போலவே கதாநாயகிகளில் தாங்கள் நடிக்கின்ற படங்களின் புரமோஷன்களில் தலை காட்ட மாட்டேன் என்கிற கொள்கையோடு இருந்தவர் நயன்தாரா.
அஜித்துக்கு கலைஞருக்கு திரையுலகினரின் பாராட்டு விழா மேடைப்பேச்சு முக்கிய காரணம் இருந்தாலும் தன்னுடைய முன்னாள் காதல் சமாச்சாரங்களைப் பற்றி கேள்விகளை எழுப்புவார்களே? என்பதற்கு பயந்தது தான் நயன் இப்படி ஒரு முடிவை எடுக்க முக்கிய காரணம்.
அவருடைய அந்தக் கொள்கை முடிவை ஏற்றுக் கொண்டே தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் பலரும் ”நீங்க நடிச்சா மட்டும் போதும்” என்று இறங்கி வந்து தங்களுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்தார்கள்.
அதைப் பார்த்ததும் அனுஷ்கா, காஜல் அகர்வால், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் படங்களின் புரமோஷன்களுக்கு வருவதை தவிர்த்து வந்தனர். நடிகைகளின் இந்த போக்கு குறித்து அவ்வப்போது திரைப்பட விழாக்களில் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினாலும் நயன் மட்டும் அவர்கள் பேச்சை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
இதற்கிடையே அனாமிகா என்ற தெலுங்கு படத்தின் புரமோஷன்களுக்கு தலை காட்டாததால் அப்படத்தின் தயாரிப்பாளர் நயன்தாராவை பகிரங்கமாக எச்சரித்தார். ஆனாலும் நயன் தன் கொள்கையை தளர்த்திக் கொள்ளவே இல்லை.
இப்படி கொள்கையே எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றிக் கொள்ளாமல் இருந்த நயன்தாரா முதல் முறையாக தான் சோலோவாக நடித்துள்ள ”ஆரம்” படத்தின் புரமோஷன்களுக்காக மீடியாக்களில் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
நயன் தாராவிடம் ஏன் இந்த திடீர் மாற்றம்?
வேறொன்றுமில்லை. நயன்தாரா நடிப்பில் கடைசியாக வந்த சில படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவின. நயன் தாராவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப்படத்துக்கு அவர் இல்லாமல் செய்த அத்தனை புரமோஷன்களும் வசூலுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இது நயன் தாரா நடித்த படமா என்கிற விஷயமே ரசிகர்களிடம் சென்று சேரவில்லை. அதோடு தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் நடிப்புத்துறையில் தன் இடத்தை தக்க வேண்டுமானால் மீடியாக்களில் தலை காட்டியே ஆக வேண்டும் என்கிற இக்கட்டான சூழலும் வந்தது. அதனாலேயே தன்னை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டுள்ள ஆரம் படத்தின் புரமோஷன்களில் தலை காட்டியிருக்கிறாராம் நயன் தாரா.
அதோடு சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன் தாரா இனி வரப்போகும் புதுப்படங்களின் புரமோஷன்களிலும் தலை காட்டுவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
கத்தரிக்கா முத்திடுச்சு… கடைத்தெருவுக்கு வர ஆரம்பிச்சிடுச்சு…!