என்.ஜி.கே – விமர்சனம் #NGK

Get real time updates directly on you device, subscribe now.

RATING – 2.5/5 

தொடர் தோல்விகளால் நொந்து போயிருந்த சூர்யா, ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய இக்கட்டான சூழலில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ”என்.ஜி.கே” அதாவது ”நந்த கோபாலன் குமரன்”.

ஆனால் சூர்யாவின் நேரமோ? செல்வராகவனின் நேரமோ? இந்தப்படமும் சூர்யாவின் சரிந்து கிடக்கும் மார்க்கெட்டுக்கு வந்து சேர்ந்திருக்கும் இன்னொரு செங்கல்லாகத்தான் அமைந்திருக்கிறது.

அரசியலில் அடிமட்டத் தொண்டன் ஒருவன் எப்படி மெல்ல மெல்ல காய்களை நகர்த்தி பின்னாளில் தனக்கு மேல் உள்ளவர்களையே ”ஆமாம் சாமி..” போட வைக்கிறான் என்பதை ‘அமைதிப்படை’ படத்தை விட வேறோரு படம் அழுத்தமாக பதிவு செய்து விட முடியாது.

ஆனாலும் அந்தந்த காலச்சூழலுக்கு ஏற்ப அரசியலில் ஏற்படும் மாற்றங்களை காட்சிகளாக்கி ரசிக்க வைக்க தமிழ்சினிமா எப்போதுமே முயற்சித்தபடியேதான் இருந்து வந்திருக்கிறது.

அப்படித்தான் ஒருசில குறைகள் இருந்தாலும், நையாண்டியும், நக்கல், கேலி, கிண்டலுமாக வந்த ஆர்.ஜே.பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

இந்த ‘என்.ஜி.கே’வும் கிட்டத்தட்ட அந்த ரகம் தான். ஆனால் எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட படம், காலம் கடந்து ரிலீசாகியிருப்பதால் காட்சிகளும் ”கட்டக்கடைசி” ரகமாகத்தான் இருக்கிறது. ”மாற்றம் முன்னேற்றம்” என்ற கொள்கையை கடந்த தேர்தலில் முன்னெடுத்து தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க தலைவர் அன்புமணியை கலாய்த்து படத்தில் வைக்கப்பட்டிருக்கும் வசனமே அதற்கு உதாரணம்.

அந்த வசனம் மட்டுமல்ல, படத்தில் இடம்பெற்றிருக்கும் பல காட்சிகளும் அந்த ரகம் தான். ஜானர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு திரைப்படம் என்றால் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று தியேட்டரில் உட்கார்ந்திருக்கிற ரசிகனை சீட்டின் நுனிக்கு வர வைக்க வேண்டும். அந்தளவுக்கு திரைக்கதையில் வேகம் இருக்க வேண்டும். ஆனால் இதில் அப்படிப்பட்ட வேகத்தை பார்க்க முடியவில்லை.

Related Posts
1 of 44

கரை வேட்டிக்கு இருக்கிற பவர் என்ன? என்பதை திரையில் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதற்காக இயற்கை விவசாயம், அரசியல் புரோக்கர், அடி மட்டத் தொண்டன் என்றெல்லாம் சம்பந்தமில்லாமல் காட்சிகளை கோர்த்து நகர்த்த வேண்டிய அவசியம் என்ன?

சூர்யாவுக்கு ‘அஞ்சான்’ படத்தில் ஆரம்பித்த தோல்வி ‘தானா சேர்ந்த கூட்டம்’ வரை துரத்தி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் செல்வராகவனை நம்பிப் போனவருக்கு மாற்றமல்ல, பெரும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. மனுஷன் சாதாரணமாக ஒரு நிகழ்ச்சியில் பேசினாலே நடிப்பது போல இருக்கும். இதிலோ வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற வெறியில் போதும் போதுமென்கிற அளவுக்கு நடித்துக் கொட்டியிருக்கிறார்.

போதாக்குறைக்கு சாய் பல்லவியும் சூர்யாவுடன் சேர்ந்து கொண்டு நடித்துத் தள்ள… பார்க்கிற ரசிகர்கள் யப்பா சாமீ போதும்பா… என்று நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறார்கள். அரசியல் தரகராக இருந்தாலும் அவருக்கும் சூர்யாவோடு ஒரு டூயட் உண்டு.

பொன்வண்ணன், பாலாசிங் இருவரும் சீரியசாகப் பேசுகிற காட்சியில் கூட சிரிப்பு தான் வருகிறது. பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் முக்கால் வாசி காட்சிகளில் தலை காட்டும் தலைவாசல் விஜய்யும், வேல ராம மூர்த்தியும் இரண்டரை மணி நேரம் ஓடுகிற இந்தப் படத்தில் ஆளுக்கு ஒரு வசனம் பேசுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். டைரக்டருக்கு ரொம்ப தாராள மனசுப்பா…

இப்படி சலித்துக் சொல்ல பல இருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் சிலாகிக்கும்படி உள்ளன.

ஒரு கட்டத்துக்கு மேல் எந்தக்காட்சி எதனுடைய தொடர்ச்சி என்கிற குழப்பம் படம் பார்க்கிற ரசிகர்களுக்கு வருமளவுக்கு எடிட்டிங்கில் படு சொதப்பல்.

சரி ஆரம்பம் தான் அப்படி இருக்கும், போகப்போக காட்சிகளோடு ஒன்றி விடலாம் என்று நினைத்தால் அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல் ”ஏ பிலிம் பை செல்வராகவன்” என்று டைட்டில் கார்டு போட்டு டாட்டா காட்டி அனுப்புகிறார்கள்.

என்.ஜி.கே – எல்.கே.ஜியில இருந்து படிக்கணும்!