சகல அம்சங்களும் பொருந்திய ‘பிச்சைக்காரன்’
தனக்கேற்ற கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவர் ஒருவரே. அதைத் தவிர அவர் படத்தின் தலைப்பும் அனைவரையும் ஈர்க்கும். அவர் தற்போது நடித்து, இசையமைத்து வரும் புதிய படமான ‘பிச்சைகாரன்’ கூட மேற்கூறிய காரணங்களுக்காக பெரிதும் பாராட்ட படுகிறது.
‘பிச்சைகாரன்’ படத்தை பற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது :
‘நம் ஒவ்வொருக்குள்ளும் ஒரு ‘பிச்சைகாரன்’ ஒளிந்திருக்கிறான். பிச்சையின் தன்மை தான் வேறுபடுகிறது. இயக்குனர் சசியுடன் சந்தர்ப்ப வசமாக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முறை சந்திக்க நேரிட்டது. அவருடன் நான் ஏற்கனவே ‘டிஷ்யூம்’ படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளேன். அவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘சொல்லாமலே’, ‘ரோஜா கூட்டம்’, ‘டிஷ்யூம்’, ‘பூ’, ‘555’ படங்களின் மூலம் என்னை மிகவும் கவர்ந்த இயக்குனர் ஆவார் சசி.
அவருடன் ஒரு நடிகராக பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசையின் பின்னணியில் அவரிடம் இப்படி ஒரு கதை இருப்பதாக சொன்னவுடன் உடனடியாக நேரம் ஒதுக்கி கதைக் கேட்டேன். மூன்று மணி நேரத்துக்கும் மேல் கதைக் கேட்டு எனக்கு சிறிதளவும் அயர்ச்சி ஏற்படவில்லை. அவ்வளவு யதார்த்தம், அவ்வளவு வேகம். உடனடியாக எப்ப ஆரம்பிக்கலாம் எனக் கேட்டேன். சிரித்துக் கொண்டே எப்ப வேணும்னாலும் என்று சொன்னவர் தலைப்பு ஓகே வா எனக் கேட்டார். வளர்ந்து வரும் நடிகரான உங்களுக்கு இது எதிர் மறையாக போய் விடுமோ என்று தன் அச்சத்தை வெளிபடுத்தினார். ஆனால் நான் இந்த தலைப்பு தான் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன்.
இதுவரை எந்த ஒரு ஹீரோவும் இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை என்பதும் எனக்கு ஊந்துதல் ஆக இருந்தது. நான் நடிகனாக வேண்டும் என முடிவெடுத்த நாளே ‘இமேஜ்’ வட்டத்துக்குள் சிக்கி விடக்கூடாது என்பதில் தீவிரமாக முடிவெடுத்து விட்டேன்.
படம் பார்க்க வரும் ரசிகர்கள் இரண்டரை மணி நேரம் பொழுதை போக்க வேண்டும், அவர்கள் மன நிறைவோடு அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்பது மட்டுமே நடிகனாக என்னுடைய இலக்கு. அந்த வகையில் ‘பிச்சைக்காரன்’ நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு வெற்றிப் படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களும் பொருந்திய ‘பிச்சைக்காரன்’ நவம்பர் மாதம் வெளிவரும்’ எனக் கூறினார் விஜய் ஆண்டனி.