ஒரே மாசம் தான்; ஆன்லைன் பைரஸி ஒழிஞ்சிடும்! : அடித்துச் சொல்லும் தயாரிப்பாளர் சி.வி.குமார்

Get real time updates directly on you device, subscribe now.

c-v-kumar1

’பீட்ஸா’வில் ஆரம்பித்து ’அதே கண்கள்’ வரை தமிழில் பல புதுமையாக திரைக்கதை அம்சம் கொண்ட வெற்றிப் படஙகளை தயாரித்த சி.வி.குமார் இப்போது தானே இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் ‘மாயவன்.’

சந்தீப், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ், அக்‌ஷரா கௌடா மற்றும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‘மர்டர் இன்வெஸ்டிக்டிவ் திரில்லர்’ வகையை சார்ந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் நலன் குமாரசாமி எழுதியுள்ளார்.

இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசி சி.வி.குமார் இன்னும் ஒரு மாதத்துக்குள் திருட்டு வி.சி.டி ஒழிந்து விடும் என்றார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது : இயக்குநர் ஆகணும்கிறது என்னோட கனவா இருந்ததே இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கணும்னு நான் திட்டம் போடுவதில்லை. வாழ்க்கைப் பயணத்துல போகுற போக்குல வாழ்றது தான் என்னோட பாலிசி.

எல்லா இயக்குநர்களிடமும் நிறைய கதைகள் விவாதிச்சிட்டே இருப்பேன். அப்படி நான் சொல்லி எல்லோருமே இம்ப்ரெஸ்ஸான கதை தான் இந்த ‘மாயவன்’.

முதல்ல நீங்க இயக்குநர் ஆக வேணாம் சார், தயாரிப்பாளராகவே இருங்கன்னு கூட சிலர் சொன்னாங்க. ஆனா திடீர்னு முடிவெடுத்து இயக்குநராகிட்டேன். இவ்வளவு தூரம் வந்ததை நினைச்சாலே சர்ப்ரைஸா இருக்கு. கதை எழுதும் போது பாட்டு கிடையாது. ஆனா கதைக்கு ஏத்தமாதிரி இரண்டு பாட்டு மான்டேஜ் ஷாட்ல வரும். குறிப்பா பின்னணி இசை நிச்சயம் மிரட்டும்.

என்ற சி.வி.குமாரிடம் இந்தப் படத்துக்கு ஏன் மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்

ஒரே தயாரிப்பாளரா ஒரு படத்தை தயாரிப்பதென்பது இன்றைய காலத்தில் இயலாத காரியம். ஹாலிவுட்டில் ஒரு படத்தை 10 ஸ்டூடியோஸ் சேர்ந்து தயாரிக்கிறாங்க. சீக்கிரமே தமிழ்லயும் அந்த ட்ரெண்ட் வரும். தயாரிப்பை விட இயக்கம் கொஞ்சம் கஷ்டமான வேலை தான். தயாரிப்பாளர் இயக்குநரா மாறும் போது அதைப் புரிஞ்சுக்க முடியுது. என்றார்.

“உங்க ‘மாயவன்’ படம் ஆன்லைனில் ரிலீசானால் தடுத்து விடுவீர்களா?” என்று கேட்டபோது, ‘கண்டிப்பா என்னோட படமும் முதல் நாளே இணையத்திலும் வெளியாகத்தான் செய்யும். நாட்டுல போலீஸ் இருக்கு, இருந்தாலும் திருட்டு நடக்கத்தானே செய்யுது. அதுமாதிரி தான் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். நாம எந்த அளவுக்குப் பாதுகாப்பா இருந்துக்கணுமோ இருந்துக்க வேண்டியது தான்.

ஆனால் புதிதாக பதவியேற்றுள்ள தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், முதல் வேலையா பைரஸியை ஒழிக்கிற முடிவைத் தான் கையில் எடுத்துருக்காங்க. அதுக்காக மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்திட்டு இருக்காங்க. நீங்க வேணும்னா பாருங்க இன்னும் ஒரு மாசத்துல பைரஸி ஒழியும். முழுமையா இல்லாவிட்டாலும் 70% சதவீதமாகவது பைரஸி ஒழிஞ்சிடும்” என்றார் சி.வி.குமார்.