5 லட்சம் முதலீடு.. 400 கோடி சம்பாத்தியம்! – அம்பலத்துக்கு வந்த டிஜிட்டல் நிறுவனங்களின் பகல் கொள்ளை

Get real time updates directly on you device, subscribe now.

டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து மூன்றாவது வாரமாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.

அதன்படி மார்ச் 1 முதல் புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் நாள்தோறும் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்து வருகின்றனர்.

இதுவரை தமிழ்சினிமா முன்னெடுத்த பல போராட்டங்கள் இவ்வளவு ஒற்றுமையாக நடந்ததில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்தப் போராட்டம் மட்டும் ஒற்றுமையாக தொடர்வதால் டிஜிட்டல் நிறுவனங்களும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் தியேட்டர் உரிமையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

புதிய தொழில்நுட்பத்தால் தயாரிப்பு செலவு குறைவு என்று சொல்லி 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொழிலை செய்ய வந்த க்யூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் தியேட்டர்களில் புரொஜெக்டர்களை இலவசமாக நிறுவி விட்டு, அதை வைத்தே பத்து ஆண்டுகளாக சுமார் 400 கோடி ரூபாய் வரை லாபம் சம்பாதித்திருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

Related Posts
1 of 76

அந்த வகையில் இ சினிமா புரொஜெக்டர் மற்றும் சர்வரை கியூப் நிறுவனம் வெறும் 5 லட்சம் ரூபாயில் இறக்குமதி செய்து தியேட்டர்களில் நிறுவி ஒரு தியேட்டருக்கு வி பி எப் என்ற பெயரில் தயாரிப்பாளர்களிடம் வாரம் 6,500 வரை கட்டணத்தை வசூலித்திருக்கிறார்கள்.

இரண்டு முறை புரொஜெக்டரை மாற்றி இருந்தாலும் 8 வருடங்களாக லாபம் பார்த்திருக்கிறார்கள். இதில்லாமல் விளம்பர வருவாய், தியேட்டர் உரிமையாளர்களிடம் பெற்ற முன்பணத்திற்கு வட்டி, மற்றும் மாத வாடகை என பல்வேறு விதங்களில் கட்டணங்களை விதித்து அதில் ஒருசிலவற்றை அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று சொல்லி தயாரிப்பாளர்கள் தலையில் கட்டி சுமார் 400 கோடி வரை லாபம் சம்பாதித்திருக்கிறார்கள்.

இந்த கொள்ளை விபரங்கள் எல்லாம் தற்போது முழுமையாக அம்பலத்துக்கு வந்து விட்டதால் தான் இனிமேலாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டுமென்றும், தயாரிப்பாளர்கள் காக்கப்பட வேண்டும் என்றும் அத்தனை தயாரிப்பாளர்களும் ஒற்றுமையோடு இருந்து டிஜிட்டல் நிறுவனங்களின் இந்தக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.