ஒருவரின் கனவால் புதிய வரலாறு உருவாகியுள்ளது! : ராஜமௌலியை பாராட்டித் தள்ளிய ஆர்.ஜே.பாலாஜி
பிரபாஸ் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ”பாகுபலி 2” திரைப்படம் இந்திய சினிமா சரித்திரத்தில் வெளியான 9 நாட்களில் 1000 கோடியை வசூல் செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
தயாரிப்பு தரப்பிலிருந்து நேற்று இந்த வசூல் விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியை இந்திய திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருக்கும் பிரபல ரேடியோ தொகுப்பாளரும், நடிகருமாகிய ஆர்.ஜே.பாலாஜி 1000 கோடியை மட்டும் பாகுபலி வசூலிக்கவில்லை, அதையும் தாண்டி உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களின் அன்பு, மரியாதை மற்றும் விருப்பத்தை இந்தப்படம் சம்பாதித்துள்ளது. என்று இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : ”பாகுபலி 2” படம் ஆயிரம் கோடி தாண்டி வசூலித்திருக்கிறது. படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
நான் சிறு வயதிலிருந்து சினிமா பார்த்து தான் வளர்ந்தேன். சென்னை சத்யம் தியேட்டரிலும், ஸ்டார் மூவில் தொலைக்காட்சிகளிலும் ஹாலிவுட் படங்களை பார்க்கும் போது, இந்திய திரைப்படங்கள் அதை விட்டு வெகு தூரம் இருப்பதாக தோன்றும். அது போன்ற படங்களை எடுக்க இங்கு யார் இருக்கிறார்கள் என எனக்குள் கேள்விகள் எழும்பும்.
இதுபற்றி நான் மற்றவர்களிடம் விவாதிக்கும் போது, ஹாலிவுட் பட்ஜெட் அதிகம், உலக அளவில் நமக்கு மார்க்கெட் இல்லை, மேலும், ஹாலிவுட் போல் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள் இங்கு இல்லை எனவே தான், தமிழ் சினிமாக்களை உலக தரத்திற்கு எடுக்க முடியவில்லை எனக் கூறுவார்கள். ஆனால், தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஒருவரின் கனவு மூலம் ஒரு புதிய வரலாறு உருவாகியுள்ளது. வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு, பாகுபலி போன்ற படத்தை எடுக்க முடியும் என்று காட்டிய உங்களுக்கு என் நன்றி.
உங்கள் படக்குழுவின் அபார உழைப்பு உங்களை கனவை நினைவாக மாற்றியிருக்கிறது. இந்த படம் ரூ.1000 கோடியை மட்டும் வசூலிக்கவில்லை, உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களின் அன்பு, மரியாதை மற்றும் விருப்பத்தை இந்தப்படம் சம்பாதித்துள்ளது. எங்களை பெருமைப்படுத்தும் விதமாக பாகுபலி படத்தை எடுத்த உங்களுக்கு எங்கள் நன்றி” இவ்வாறு சிலாகித்து எழுதியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.