பக்கா கிராமத்து இளைஞராக சாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்”
‘மதயானைக் கூட்டம்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் “இராவண கோட்டம்” படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சாந்தனு.
கண்ணன் ரவி என்ற புதிய தயாரிப்பாளர் தயாரிக்கும் இப்படத்தைப் பற்றி இயக்குனர் விக்ரம் சுகுமாரனிடம் கேட்டபோது, “மதயானைக் கூட்டம் படம் வெளியான போது படத்துக்கு கிடைத்த வரவேற்பும், எனக்கு கிடைத்த பெயரும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே நேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேன். தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.
இந்த படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக சாந்தனு பாக்யராஜ் பாரம்பரிய வேட்டி, சட்டையுடனே இருக்கிறார். மேலும் ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கில் தான் உரையாடுகிறார். நகரத்தில் வளர்ந்த அவருடைய, கிராமத்து பையன் தோற்றம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும். இராவண கோட்டம் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
நாயகனை போலவே, அப்பாவிதனம் மற்றும் குருட்டு தைரியம் கலவையாக கொண்ட ஒரு குணாதிசயம் தான் கதாநாயகியின் கேரக்டர். அப்படி கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றை சிறப்பாக செய்யும் ஒரு நாயகியை தேடி வருகிறோம்.
படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சிறப்பான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறோம். அவற்றை உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்றார்.