அரசியலில் பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் என் பின்னால் வராதீங்க! : ரசிகர்களை எச்சரித்த ரஜினி

Get real time updates directly on you device, subscribe now.

rajini1

கோடிகளில் புரள்கிற முன்னணி ஹீரோக்கள் எத்தனை பேர் அந்த சம்பாத்தியத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும் தங்களது ரசிகர்களை நேரில் சந்திக்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கான பதிலை யோசித்தால் அரை டஜன் ஹீரோக்கள் தான் தேறுவார்கள்.

அதிலும் ரஜினி போன்ற மாஸ் ஹீரோவை எப்படியாவது நேரில் சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் நீண்டநாள் ஆசை.

2007ம் ஆண்டு தனது ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினி அதன்பிறகு ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வீட்டுக்கு வரும் சில நூறு ரசிகர்களை சந்திப்பார். அத்தோடு அவருடைய சந்திப்பு முடிந்து விடும்.

அதன்பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் சந்திப்பாக இன்று ராகவேந்திரா திருமணம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தனது ரசிகர்களை சந்தித்தார் ரஜினி.

Related Posts
1 of 72

ஒவ்வொரு ரசிகரையும் தனியாக சந்தித்துப் பேசி அவர்களுடன் புகைப்படம் எடுப்பது என்று தினமும் 1000 ரசிகர்கள் வீதம் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக ரசிகர் மன்றங்கள் மூலமாக அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டிந்தது.

இந்த சந்திப்பில் பேசிய ரஜினி வழக்கம் போல தனது அரசியல் பிரவேசத்தைப் பற்றிப் பேசினார். அதோடு தன்னை ஏன் ரசிகர்கள் அரசியலுக்கு வரச்சொல்கிறார்கள் என்பது பற்றியும் பேசிய ரஜினி அரசியலில் நுழைந்து பணம் சம்பாதிக்க நினைக்கும் ரசிகர்கள் என் பின்னால் வரவே வேண்டாம் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது ”சில ரசிகர்கள் எனக்கு கடிதம் எழுதறாங்க. நாம எப்ப முன்னேறுறது? நமக்கு முன்னால பிறந்தவங்கள்லாம் கவுன்சிலர், மினிஸ்டர்னு போறாங்களேன்னு பேட்டி கொடுக்கிறாங்க. ஆசைப்படறாங்க. அவங்க ஆசை தப்பில்லை. அதை வச்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறதை பார்த்தா, வருத்தப்படறதா, கோபப்படறதா, சிரிக்கிறதான்னு தெரியலை. நான் அப்பவும் சொல்றேன், இப்பவும் சொல்றேன். அந்த ஆண்டவன் கையில்தான் என் வாழ்க்கை இருக்கு.

அவன் கையில நான் ஒரு கருவி. அவன், நடிகனா என்னை பயன்படுத்தறான். நான் நடிச்சுட்டிருக்கேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்தறானோ, அதுக்கு நியாயமா, உண்மையா இருப்பேன். இப்ப மக்களை மகிழ்விக்கணும். பண விஷயங்கள் அப்புறம் தான். அதே போல, என்ன பொறுப்பை கொடுத்தாலும் நியாயமா, சத்தியமா இருப்பேன். அது என்னன்னு எனக்கு தெரியாது. அது கடவுள் கையில தான் இருக்கு.

அரசியல் ஆசை இருக்கிற என் ரசிகர்களுக்கு இப்பவே சொல்லிக்கிறேன். நான் அரசியலுக்கு வரலைன்னு சொன்னா ஏமாந்திடுவீங்க. அப்படி அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த மாதிரி ஆட்களை கிட்ட கூட சேர்க்க மாட்டேன். நுழைய கூட விடமாட்டேன். இப்பவே ஒதுங்கிடுங்க” என்றார் ரஜினி.