இன்னும் ஒரு வாரத்துக்குள் ‘லிங்கா’ பிரச்சனைகள் தீரும்! : திருப்பூர் சுப்ரமணியன் உறுதி

Get real time updates directly on you device, subscribe now.

lingaa

ன்னும் எத்தனை மாதங்களுக்கு ‘லிங்கா’ விவகாரம் இழுத்துக் கொண்டே போகுமே என்று சாதாரண ரசிகனும் எரிச்சலாகிற அளவுக்கு விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கொஞ்சநாள் அமைதியாக இருந்த விநியோகஸ்தர்கள் மீண்டும் கடந்த ஒரு வாரமாக மீடியாக்களை சந்தித்து ரஜினி தரப்பு ஆதரவாளர்கள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

”ரஜினி கொடுத்த 12.50 கோடியில் மொத்தம் 5 கோடியே 89 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டது. எஞ்சிய தொகை 6 கோடியே 61 லட்சம் இன்றுவரை கொடுக்கப்படவில்லை” என்று ரஜினி தரப்பில் தூதுவராக நியமிக்கப்பட்ட பிரபல கோவை விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் மீது புகார் கூறினார் திருச்சி விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

அதற்கு விளக்கம் கொடுத்து கோவை விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் பேசியதாவது :

நஷ்ட ஈடு தொடர்பா நடந்த பேச்சுவார்த்தையில 12.50 கோடி ரூபாய் தர்றேன் அதுக்கு மேல என்கிட்ட எந்தப்பணமும் கேட்கக்கூடாதுன்னு சொன்னார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

அவர் சொன்ன பணத்துக்கு எல்லா விநியோகஸ்தர்களும் சம்மதம் சொன்னாங்க. அதுக்கப்புறம் தயாரிப்பாளர் 12.50 கோடியில அவர் 6.26 கோடி ரூபாய் மட்டும் தான் கொடுத்தார். அந்தப் பணத்தை கணக்கு கொடுத்த விநியோகஸ்தர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டோம். இன்னும் தயாரிப்பாளர்கிட்ட இருந்து எங்களுக்கு 6.24 கோடி பணம் வரவில்லை. அது வந்த உடனே விநியோகஸ்தர்களுக்கு பிரித்துத் தந்து விடுவோம்.

இதுக்கு இடையில சிங்காரவேலன் ரஜினி சார்கிட்ட நான் கால்ஷீட் வாங்கித் தர்றேன். அவரை வெச்சு ஒரு படம் பண்ணிக்கங்கன்னு நான் சொன்னதா ரெண்டு நாளைக்கு முன்னாடி மீடியாக்கள் கிட்ட சொல்லிருக்கார். எந்த இடத்திலும் நானோ ரஜினி சாரோ அப்படி ஒரு கமிட்மெண்ட்டை சொல்லவே இல்லை. ரஜினி சாரை பொறுத்தவரை ஒரு படத்துல பிரச்சனை என்றால் அந்தப்படத்தோட அந்த பிரச்சனையை சரி செய்யணும்னு சொல்லுவார். அப்படித்தான் இந்தப்பட பிரச்சனையிலும் சொன்னார்.

எதுக்கெடுத்தாலும் அவரோட செல்போன்ல பேசுறதை ரெக்கார்ட் பண்ணி அதை ஆதாரமா வெளியிடும் சிங்காரவேலன் ரஜினி சார் கால்ஷீட்டைப் பத்திப் பேசினதையும் ஆடியோ ஆதாரமா வெளியிட்டிருக்கலாமே..? ஏன் செய்யல? என்னா ரஜினி சார் அப்படி ஒரு கமிட்மெண்ட்டை கொடுக்கவே இல்லை.

நானும் இந்த சினிமாவுல 35 வருஷமா விநியோகஸ்தரா இருக்கேன். சுமார் 650 படங்களுக்கும் மேல வாங்கி விநியோகம் பண்ணிருக்கேன். ஒரு படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கும் போது, நஷ்டம் வந்தால் அந்த நஷ்டத்தை அந்தப்படத்தோட தயாரிப்பாளர்கிட்டயோ இல்லேன்னா ஹீரோகிட்டயோ கேட்கிறது தவறு. அது சரியான முறையல்ல.

ரஜினி சார் மனிதாபிமான அடிப்படையில் பணம் கொடுக்க முன்வந்தார். அதை கொடுக்கக் கூடாதுன்னு என்னால சொல்ல முடியாது. எற்கனவே கொடுத்த பணம் போக மீதி பணத்துக்கு மீதி விநியோகஸ்தர்கள்கிட்ட இருந்து கணக்கு கேட்டிருக்கிறார் ராக்லைன். அவங்க கணக்கு கொடுத்த ரெண்டு மூணு நாள்ல 6.24 கோடி ரூபாயை பிரிச்சிக் கொடுத்து விடுவோம். ‘லிங்கா’ சம்பந்தமான எல்லாப் பிரச்சனைகளும் முடிவுக்கு வந்திடும் என்றார் திருப்பூர் சுப்ரமணியன்.