இதானா உங்க டக்கு..! : மீண்டும் மீண்டும் கோழை என்று நிரூபிக்கும் ரஜினி

Get real time updates directly on you device, subscribe now.

rajinikanth

ரசியலுக்கு வந்தால் ஆட்சியை திறம்பட நடத்துகிற அளவுக்கு துணிச்சலும், தைரியமும் இருப்பதாக ரஜினியை நம்புகிறார்கள் அவரது ரசிகர்கள். அதனால் தான் அவர் எப்போது, எந்த மேடையில் ஏறினாலும் அரசியலுக்கு வருவது குறித்து எதுவும் பேசுவாரா? என்கிற எதிர்பார்ப்பும் எல்லோருக்குள்ளும் எழுந்து விடுகிறது.

ஆனால் எந்த ஒரு பொதுப்பிரச்சனையாக இருந்தாலும் அதில் கருத்து எதுவும் சொல்லாமல் ஒதுங்கி இருக்கவே விரும்புவது போல அமைதியாகி விடுகிற ரஜினி தற்போது தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான சூழல் இருந்தும் ”எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக” இருந்து விடுவது மாதிரியான செயல்பாடுகளையே முன்னெடுக்கிறார். குறிப்பாக தன்னுடன் நட்பாக இருக்கிற அத்தனை அரசியல் கட்சிகளுடன் அவர் எந்தவித மோதல் போக்கையும் கடை பிடிக்க விரும்பவில்லை என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தன்னை சந்திக்க  கஸ்தூரி வந்தாலும், இந்து மக்கள் கட்சி வந்தாலும் அவர்களுக்கென்று மெனக்கிட்டு நேரம் ஒதுக்கி சந்தித்துப் பேசுகிறார்.

இப்படிப்பட்ட ஒருவர் ”நாளை போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்” என்று வீராப்பாக சொல்லிவிட்டு அதை செயலில் காட்டாமல் மீத்தேன், கதிரா மங்கலம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் வழக்கம் போல வாயே திறக்காமல் மெளனமாக இருப்பது பொது வெளியில் ரஜினி மீதான எதிர்ப்பு விமர்சனங்கள் அதிகரிக்க காரணமாகியிருக்கிறது.

சரி மக்கள் பிரச்சனைகளில் தான் குரல் கொடுக்க வேண்டாம், தான் சார்ந்திருக்கும் சினிமாத்துறையைப் பாதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரிப்பிரச்சனையிலாவது முதல் ஆளாக குரல் கொடுத்திருக்க வேண்டாமா?

இதைத்தான் ”தான் சார்ந்திருக்கும் திரையுலக பிரச்சனைக்கே வாய் திறக்காத ரஜினி நாளை மக்களுக்காக எப்படிப் பேசுவார்?” என்று சில தினங்களுக்கு முன்பு ரஜினியைப் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார் டி.ஆர்.

Related Posts
1 of 12

இப்படி நாலா பக்கமும் தன் மீதான எதிர்ப்பு விமர்சனங்கள் எழுவதை உற்று நோக்கிய ரஜினி இன்று ”தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சகணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவருடைய இந்த திருவாய் மலரல் பொதுவெளியில் வரவேற்பைப் பெரும் என்று பார்த்தால் ”இதுதான் உங்க டக்கா?” என்று நக்கல் செய்கிற அளவுக்கு கூடுதலாக கெட்டப் பெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

ரஜினியின் கருத்தைப் படித்த பலரும் ”இதுதான் உங்களோட சிஸ்டமா?” என்றும், ”ஊரை ஏமாற்ற ரெண்டு பேர் ஏற்கனவே இருக்காங்க நீங்களும் அதையே சொல்லணுமா?” என்றும் ”அப்படியே கதிராமங்கலத்தைப் பற்றியும் கருத்துச் சொல்லுங்க” என்றும் கோபத்தோடு ரஜினிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

முன்னதாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்த அறிவிப்பு வந்தபோது திரைத்துறைக்கு 28 சதவீதம் வரி என்று மத்திய அரசு சொன்னபோது முதல் ஆளாக கண்டனக் குரல் கொடுத்தவர் கமல்ஹாசன் தான். அவரைத் தொடர்ந்து சித்தார்த் உள்ளிட்ட நடிகர்களும், பல தயாரிப்பாளர்களும் மத்திய, மாநில அரசுகளின் இரட்டை வரிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள், கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இப்படி ஊரே முழித்த பிறகு தான் தூக்கத்திலிருந்து விழிக்கிற ரஜினியை நம்பி நாளை தமிழ்நாட்டைக் கொடுத்தால் எந்த முடிவை எப்படி எடுப்பார்? எப்போது எடுப்பார்? என்பது புரியாத புதிராகத்தானே இருக்கும்?

ஆக, காலம் கடந்த செயல்பாடுகள் மூலம் மீண்டும் மீண்டும் தான் ஒரு கோழை என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் ரஜினி!