ஊரே கண்ணு வைக்குது… : அடக்கி வாசிக்கும் சிவகார்த்திகேயன்

”கடின உழைப்பால் தான் இன்றைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன், ஆனால் அதை எல்லோரும் அதிர்ஷ்டம் என்கிறார்கள். இதை நான் எங்கப் போய் சொல்லுறது” என்று பொருள்வரும்படி ‘ரஜினிமுருகன்’ படத்தில் பாடல் வரி ஒன்றைக்கூட பாடி உலகத்துக்கு சொல்லிப் பார்த்து விட்டார் சிவகார்த்திகேயன்.
இருந்தாலும் இன்று வரை அவர் சொல்வதைத்தான் யாரும் நம்பத் தயாராகவில்லை.
எல்லாம் அவருக்கு நேரம், பல ஹீரோக்கள் வருஷக்கணக்குல கஷ்டப்படும் போது அவர் மட்டும் குறுகிய காலத்துல டாப் ஹீரோக்கள் லிஸ்ட்ல வந்துட்டார் என்று அவர் காதுபடவே பேசுபவர்கள் இன்றுவரை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
யார் என்ன பேசினால் என்ன?
நாம் நம் பாதையில் சரியாகப் பயணிப்போ என்கிற கொள்கையோடு அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ தான் சமீபகாலமாக ‘கோலிவுட் ஆப் த டாக்’ ஆக மாறியிருக்கிறது.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் ரெமோ படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் இதுவரை வந்த படங்களின் பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகம் என்பது தான் இந்த பரபரப்புக்கு முக்கிய காரணம்.
பொதுவாக சிவகார்த்திகேயனின் எந்தப்படமும் பில்டப் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால் ‘ரெமோ” பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவை ஷங்கர் பட விழா போல மிகப்பிரம்மாண்டமாக நடத்தினார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டலில், கோடிக்கணக்கான பணத்தை தண்ணியாக செலவு செய்து நடத்தப்பட்ட அந்த விழா பல பேருடையை கண்களை பெரிதாகவே உறுத்தியிருக்கிறது
அடுத்தடுத்து ரெமோ படத்துக்காக செய்யப்படும் சின்னச் சின்ன பப்ளிசிட்டி சமாச்சாரங்களும் கூட ஊரார் கண்களை உறுத்தித் தொலைக்க, விஷயம் சிவகார்த்திகேயன் காதுகளை எட்டியிருக்கிறது.
ஊரார் சொல்லும், ஊரார் கண்ணும் பொல்லாதது என்பது சிவகார்த்திகேயனுக்கு தெரியாதா என்ன?
அதனால் தான் அதனால் தான் பர்ஸ்ட் லுக் விழாவைத் தவிர ரிலீஸ் தேதியை நெருங்கிய வேளையிலும் அடுத்தடுத்து மிகப்பிரம்மாண்டமாக நடத்த இருந்த ‘ரெமோ’ ட்ரெய்லர் பங்ஷனையும், ஆடியோ ரிலீஸ் பங்ஷனையும் ரத்து செய்யச் சொல்லி விட்டு நேரடியாக ரிலீஸ் வேலைக்கு செல்லும் படி தயாரிப்பாளருக்கு அறிவுறுத்தி விட்டாராம்.
சில முடிவுகள் ரொம்பவே நல்லது!