சங்கு சக்கரம் – விமர்சனம்
RATING : 3/5
நட்சத்திரங்கள் – புன்னகைப் பூ கீதா, திலீப் சுப்பராயன், என்.ராஜா, பிரதீப், ராக்கி, மோனிகா மற்றும் பலர்
இசை – சபீர்
ஒளிப்பதிவு – ரவி கண்ணன்
இயக்கம் – மாரிசன்
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’
கால அளவு – 2 மணி 4 நிமிடங்கள்
வகை – காமெடி, ஃபேண்டஸி, ஹாரர்
ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் பழைய மாளிகையில் பேய் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த மாளிகையை எப்படியாவது விற்க வேண்டுமென்று நினைக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் மாளிகையில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயை ஓட்ட இரண்டு மந்திரவாதிகளை அங்கு அனுப்புகிறார்.
தெருவில் விளையாட இடமில்லாததால் நண்பர்களான 9 சிறுவர், சிறுமிகள் அந்த பேய் பங்களாவுக்குள் விளையாடச் செல்கிறார்கள். விளையாட வந்த அவர்களை கடத்தி வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க நினைக்கிறான் கடத்தல்காரரான திலீப் சுப்பராயன்.
அந்த 9 பேரில் 500 கோடி சொத்துக்கு ஒரே வாரிசான சிறுவன் ஒருவனை அதே பங்களாவுக்குள் வைத்து கொலை செய்து, பழியை பேய் மீது போட்டு விட்டு அவனுடைய சொத்துக்களை அபகரிக்க திட்டம் போடுகிறார்கள் அவனது கார்டியன்கள்.
உண்மையாக காதலித்த இளம் பெண்ணை தனது ஆசைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி தூற வீசும் திட்டத்தோடு அவளோடு பங்களாவுக்குள் வருகிறான் ஒரு இளைஞன்.
இப்படி பணம், பெண் என்று அலையும் அந்த கெட்ட எண்ணம் கொண்ட கும்பல்களிடமிருந்து சிறுவர், சிறுமிகள் எப்படி தப்பிக்கிறார்கள்? அதற்கு அங்கு பேயாக இருக்கும் தாய் பேயும், அவரது குழந்தை பேயும் எப்படி உதவி செய்கிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.
”நன்றி கெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா…” என்று சொல்வது பழைய ட்ரெண்ட். ”நன்றி கெட்ட மனிதர்களை விட யாருக்கும் எந்த துன்பத்தையும் தராத பேய்களே மேலடா…” என்று இப்போதையை ட்ரெண்ட்டுக்கேற்ற புது சிந்தனையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாரிசன்.
பேய்க்கென்று தனி ப்ளாஷ்பேக், பங்களாவுக்குள் பேய் வந்து விட்டாலே விளக்குகள் எல்லாம் அணைந்து விடுவது அல்லது அணைந்து அணைந்து எரிவது, பேயைப் பார்த்ததும் குழந்தைகள் பயந்து ஓடுவது என பேய்ப் படங்களுக்கே உரிய ரெகுலர் காட்சிகள் இந்தப் படத்தில் இல்லாததே வித்தியாசமான யோசனை தான்.
அதிலும் தன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டும் பேயிடம் ”சரி கொலை பண்ணு, அதுக்கப்புறம் நானும் ஆவியாகி உன்கிட்ட தானே வருவேன், அப்போ உன்னை பார்த்துக்கிறேன்” என்று துணிச்சலாகப் பேசும் சிறுமி.
”எல்லா பாடத்தையும் நடத்துறதுக்கு தனித்தனி டீச்சர் இருக்கும் போது நாங்க மட்டும் ஏன் எல்லா பாடத்தையும் ஒரே ஆளா இருந்து படிக்கணும்?” என்று கேட்கும் சிறுவன் என சிறுவர், சிறுமிகளின் புத்திசாலித்தனத்தையும், குறும்புகளையும் படம் முழுக்க பரவ விட்டிருப்பது விறுவிறுப்புக்கு பலம் சேர்த்திருக்கிறது.
பல காட்சிகளில் ‘புன்னகைப் பூ’ கீதாவை ரோப்பில் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள். பேயாக வரும் அவரும், கடத்தல்காரனாக வரும் ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ திலீப் சுப்பராயன் இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். “டாரு டமாரு..” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு திலீப் செய்யும் காமெடி கலந்த வில்லத்தனம் ரசிக்கும்படியாக இருக்கிறது. குழந்தை பேயாக வரும் மோனிகா மற்றும் படத்தில் வருகிற அத்தனை குழந்தைகளும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ”ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?” என்கிற கேள்வியை டைமிங்க்காக வைத்ததும், மேற்கத்திய இசையை விட, நம்ம ஊர் இசைக்கு இருக்கின்ற தனித்தன்மையையும் காட்சிப்படுத்திய விதமும் தியேட்டரில் கைத்தட்டல்களை அள்ளுகிறது.
முழுப்படமும் ஒரே பங்களாவுக்குள் நகர்ந்தாலும் போரடிக்காதபடி ஃகலர்புல்லாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி கண்ணன். அவருடைய அந்த காட்சி நகர்த்தலுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது சபீரின் பின்னணி இசை. சிஜி உள்ளிட்ட தொழில்நுட்பமும் பாராட்டும்படி உள்ளது.
பேய்களைப் பார்த்து குழந்தைகள் பயந்து நடுங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. இது குழந்தைகளைப் பார்த்து பேய்களை தெறித்து ஓடுகிற காலம் என்கிற புதிய பார்முலாவில் குழந்தை நட்சத்திரங்களுடன் குதூகலமும், கொண்டாட்டமுமாக இயக்கித் தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மாரிசன்.
சங்கு சக்கரம் – குழந்தைகள் கொண்டாட்டம்!