“அரசியலுக்கு வருகிறேன்” – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களை சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த ஐந்து நாட்களாக சந்தித்து வருகிறார்.
சென்ற மே மாதம் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி ‘போர் வரவில்லை, அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறியிருந்தார். இதனால் அவர் போர் என்று குறிப்பிட்ட அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் ரசிகர்களிடையே இருந்தது.
பின்னர் இரண்டாவது கட்டமாக ரசிகர்களை சந்திக்க ஆரம்பித்த ரஜினி முதல் நாள் சந்திப்பிலேயே அரசியல் வருகை குறித்த தனது நிலைப்பாட்டை டிசம்பர் 31-ம் தேதி (இன்று) அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இன்று காலை ரசிகர்களைச் சந்தித்து அவர்கள் முன்னிலையில் பேசிய ரஜினிகாந்த் அவருடைய அரசியல் நிலையைப் பற்றி அறிவித்தார்.
இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரசிகர்கள் ஆவலோடு ரஜினிக்காக காத்திருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே தான் அரசியலுக்கு வருவதாகவும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது… ”நான் அரசிலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்.
பணம், பேர், புகழை சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. அதையெல்லாம் நீங்கள் எனக்கு ஆயிரம் மடங்கு கொடுத்து விட்டீர்கள். பதவி மேல எனக்கு ஆசை இருந்தால் 1996-லேயே நான் அரசியயலுக்கு வந்திருப்பேன். அது வேண்டாம் என்று தள்ளி வைத்தேன். 48 வயதில் தள்ளி வைத்த அந்த அரசியல் ஆசை, 68 வயதில் வருமா?
அரசியல் கெட்டு விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய் விட்டது. கடந்த ஒரு ஆண்டாக, தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வைத்து விட்டது. எல்லா மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்க வைத்து விட்டார்கள்.
இந்த நேரத்தில் தான் கூட இந்த முடிவை நான் எடுக்கவில்லை என்று சொன்னால், என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்காக நான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால் அந்த குற்ற உணர்வு என்னை பாதிக்கும்.
படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழை பணக்காரன் இப்படி எல்லாரையும் நாம் இணைக்க வேண்டும். எல்லா மக்களுக்குமான ஒரு நேர்மையான ஒரு ஆட்சியை தருவோம். முதலில் நாம் நம் மன்றத்தை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம்.
அரசியல் மாற்றம், அதுக்கு நேரம் வந்து விட்டது, சிஸ்டத்தை மாத்தணும். உண்மையான நேர்மையான நாணயமான வெளிப்படையான சாதி, மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம், விருப்பம். நான் சொன்ன திட்டங்களை நாம் செயல்படுத்தவில்லை என்றால் 3 வருடத்தில் நம் ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அது ஒரு தனி மனுஷனால முடியாது. தமிழக மக்கள் எல்லோரும் என்னுடன் இருக்க வேண்டும். அரசியல் என்பது சாதாரண விஷயமில்லை, இது எனக்குத் தெரியும். கட்சி ஆரம்பித்து, தேர்தல்ல போட்டியிடுவதும் சாதாரண விஷயமில்லை. நடுக்கடலில் முத்து எடுப்பது மாதிரி. மக்களுடைய அன்பு, அபிமானம், ஆதரவு இருந்தால் தான் இதை சாதிக்க முடியும். ஆண்டவனுடைய அருள், மக்களுடைய அன்பு இரண்டும் எனக்குக் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு” என்று பேசினார் ரஜினி.
ரஜினியின் அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து சந்திப்பு நடந்த ராகவேந்திரா திருமண மண்டபத்தின் முன்பு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
ரஜினியின் இந்த அறிவிப்பின் மூலம் அவர் பல ஆண்டுகளாக வருவேன், வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த அரசியல் எண்ட்ரி குறித்த குழப்பத்துக்கு தற்போது உறுதியான பதில் கிடைத்திருக்கிறது.