சத்ரியன் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

SATHRIYAN

RATING : 3/5

நீ வைத்திருக்கும் ஆயுதத்தைக் கண்டு தான் இந்த சமூகம் பயப்படுகிறது. உன்னைக் கண்டு அல்ல; ஆயுதமும், வன்முறையும் சீரான சமூக வாழ்க்கைக்கு சிறப்பானதல்ல என்கிற சமூகக்கருத்துகளை முன் வைக்கிற படம் தான் இந்த ‘சத்ரியன்.’

திருச்சியைச் சேர்ந்த ஹீரோ விக்ரம் பிரபுவும் அவரது நண்பர் கதிரும் ஒட்டுமொத்த திருச்சி மாநகருக்கே மிகப்பெரிய ரெளடிகளாக இருக்க ஆசைப்படுகிறார்கள். அதற்காக இருவரும் எதிரும், புதிருமாக இருக்கும் பெரிய ரெளடிகள் சரத் மற்றும் அருள்தாஸிடம் (விக்ரம் பிரபு சரத்திடமும்) (கதிர் அருள்தாஸிடமும்) தனித்தனியாக அடியாளாக வேலைக்குச் சேர்கிறார்கள்.

இதில் திருச்சியில் செல்வாக்குடன் வலம் வரும் அமைச்சர் நந்தகுமாரின் வலது கரம் தான் ரெளடி சரத்.

அவர் மாற்றுக் கட்சித் தலைவரை சந்தித்து விட்டு வந்தார் என்கிற தகவல் வரவும் இனி இவனிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது என்று முடிவு செய்யும் அமைச்சர் அருள்தாஸை விட்டே அவரை போட்டுத் தள்ளி விட்டு அந்த இடத்தில் அருள்தாஸை வைக்கிறார். இதனால் சரத் இடத்தில் அவரது விசுவாசியான விஜய் முருகன் வருகிறார். அவருக்கு அடியாளாக விக்ரம் பிரபு வருகிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் சரத்தின் மகளான மஞ்சிமா மோகனுக்கு பாதுகாப்பாக போக வேண்டிய சூழல் விக்ரம் பிரபுவுக்கு வருகிறது. விக்ரம் பிரபுவின் அந்த தைரியம் கண்டு அவரை காதலிக்கிறார் மஞ்சுமா மோகன்.  இது விஜய் முருகனுக்கும், மஞ்சுமா மோகன் வீட்டுக்கும் தெரிய வர கடும் எதிர்ப்பு கிளம்ப அதன் விளைவாக விக்ரம் பிரபுவை கொலை செய்யவும் முயற்சி நடக்கிறது?

அந்த கொலை முயற்சியிலிருந்து அவர் தப்பித்தாரா? காதல் கை கூடியதா? இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

ரெளடிக் கதைகள் என்றாலே மதுரையைத் தான் காட்டுவார்கள். ஆனால் இதில் முழுக்க முழுக்க திருச்சியைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

Related Posts
1 of 5

ரெளடியிஸப் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்கிற வரைமுறையை அப்படியே தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு இப்படியும் ஆக்‌ஷன் படம் எடுக்கலாமென்று வெட்டு, குத்து ரத்தம் நெடியில்லாத படமாக தந்திருக்கிறார்கள்.

ஹீரோவான விக்ரம் பிரபு சைலண்ட்டான ரெளடியாக வருவது ரசிக்க வைக்கிறது. குறிப்பாக எதிரிகளை துரத்துகிற காட்சிகளில் சந்து பொந்துகளில் எல்லாம் பூகுந்து ஓடுகிற வேகமான காட்சிகள் செம.. செம…

ஹீரோயின் மஞ்சுமா ‘பெருத்தது’ வரைக்கும் போதும்மா என்று சொல்ல வைக்கிறார். சுடிதார், சேலை என மாடர்ன் இல்லாத ட்ரெடிஷனல் காஸ்ட்யூம்களில் மனசுக்கு நெருக்கமாகிறார்.

ரியோ, கவின், ஐஸ்வர்யா தத்தா, நரேன், அருள்தாஸ், சரத், விஜய் முருகன், செளந்தர் என படத்தில் வருகின்ற மற்ற கதாபாத்திரங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் படம் என்றாலே வேகமாக வண்டியை ஓட்ட வேண்டும், பத்து பதினைந்து டாட்டா சுமோக்களில் கத்தி கடப்பாவை சுற்றிக் கொண்டே வர வேண்டும் என்கிற ரெகுலர் டச் இல்லை என்பது நிறைவாக இருந்தாலும் அவ்வளவு பெரிய ரெளடியின் மகள் காரில் செல்லாமல் கட்டாயமாக அரசுப் பேருந்தில் மட்டுமே செல்வது, அவருக்கு பாதுகாப்பு என்று விக்ரம்பிரபுவும் அவருடன் ஒருவரும் சேர்ந்து டூவிலரை எடுத்துக் கொண்டு பின்னாலேயே போவது, பஸ் – ஸ்டாப் ஈவ் டீஸிங் என படத்தில் அப்பட்டமாகத் தெரிகிற பழைய காட்சியமைப்புகளை கொஞ்சமாவது பட்டி டிங்கரிங் பார்த்திருக்கலாம்.

‘கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு’, ‘பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகமே இருண்டு போயிடுமாம்’ போன்ற அப்டேட் செய்யப்படாத வசனங்களும், முதுமொழிகளும் படத்துக்கு மைனஸ்.

யோகிபாபுவை இரண்டே இரண்டு சீன்களில் காட்டி விட்டு இன்னும் வருவார் என்று உட்கார்ந்தால் வராமலே போய் விடுகிறார். அதேபோல கவின் – ஐஸ்வர்யா தத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் கண்டினியுட்டி மிஸ்ஸிங். ஏன் இந்த பெருங்குழப்பம்?

பரபரப்பில்லாத திரைக்கதைக்கு விறுவிறுப்பு வேகத்தைக் கூட்டும் யுவனின் பின்னணி இசையும், சந்து பொந்துகளில் ஓடுகிற காட்சிகளை கஷ்டப்பட்டு முழுமையாக பதிவு செய்திருக்கும் சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவும் இயல்பு மீறாத சண்டைக்காட்சிகளும், ரத்தம், வெட்டு, குத்து இவற்றுக்கெல்லாம் இடமிருந்தும் அதை முகம் சுளிக்காத வண்ணம் பயன்படுத்தியிருக்கும் இயக்குநரின் புத்திசாலித்தனமும் ஆக்‌ஷன் படங்களில் புதுமையான வரவு தான் இந்த ”சத்ரியன்.’