உனக்காக மட்டுமே இசையமைக்கிறேன் : சந்தானத்தை நெகிழ வைத்த சிம்பு!
இனிமே ஹீரோவாக நடிக்கலாமா வேண்டாமா என்கிற யோசனையில் இருந்த சந்தானத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த படம் இனிமே இப்படித்தான்.
ரசிகர்கள் மத்தியில் அந்தப்படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து சேதுராமன் இயக்கத்தில் சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்து வருகிறார் சந்தானம்.
சந்தானத்தோடு விவேக், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட கலக்கல் காமெடி நடிகர்கள் நடிக்கும் இப்படத்தை வி.டி.வி கணேஷ் தயாரிக்கிறார்.
இப்படத்துக்கு முதலில் அனிருத்தை இசையமைக்க வைக்க முடிவு செய்திருந்தார் சந்தானம். அவருக்காக பல மாதங்கள் காத்திருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து யாரை இசையமைப்பாளராகப் போடலாம் என்று சந்தானம் யோசிக்கும் போதே நானே உன்னோட படத்துக்கு இசையமைக்கிறேன் என்று ஓ.கே சொல்லியிருக்கிறார் நடிகர் சிம்பு.
சந்தானம் இன்றைக்கு திரையுலகில் ஹீரோ லெவலுக்கு வளர்ந்து நிற்கக் காரணமே சிம்பு தான். விஜய் டிவியில் காமெடி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவரை தனது படங்களில் நடிக்க வைத்து வளர்த்தெடுத்தார். இதற்காகவே சிம்பு படம் எதுவாக இருந்தாலும் தேதி மாறாமல் கால்ஷூட் கொடுத்து நடித்துக் கொடுத்து விடுவார். அந்த நட்பு இன்றைக்கும் தொடர்ந்த நிலையில் தான் சந்தானத்துக்காக மட்டுமே அவருடைய இந்தப் படத்தில் இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சிம்பு.
இதுகுறித்து நடிகர் சந்தானம் ”எனது காட்ஃபாதரும், மனித நேயம் மிக்கவருமான சிம்பு முதன்முறையாக எனது சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வாழ்த்துக்கள்.” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
ஒரு பாடகராக சிம்புவை ரசிகர்களுக்கு தெரியும் என்றாலும் ஒரு இசையமைப்பாளராக சிம்பு எப்படி என்பது தான் ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டியிருக்கும் விஷயம்.
ஜமாய்ங்க… சிம்பு ஜமாய்ங்க…