சிம்பு கொடுத்த ஒத்துழைப்பு! – அசந்து போன ஹன்ஷிகா படக்குழு
‘குட்டி குஷ்பு’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகாவின் 50-வது படமாக தயாராகி வருகிறது ‘மஹா’.
அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இதில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முன்னாள் காதலியின் படமாக இருந்தாலும், டேக்கா கொடுக்காமல் கொடுத்த தேதிகளில் சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்து படக்குழுவினரை அசர வைத்திருக்கிறார் சிம்பு.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் சிலாகித்துப் பேசியதாவது, “நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஐந்து வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க வேண்டும் என்பதால் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.
இந்த கட்ட படப்பிடிப்பில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. சிம்புவின் முழு ஒத்துழைப்பால் படப்பிடிப்பு மிகச்சிறப்பாக போய்க்கொண்டிருப்பது எனக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக இருக்கிறது.
எங்களால் சிம்புவுக்கு ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, ஆனால் அவரோ, “சார், இது ஒன்றும் திரையில் தெரியப் போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார். நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பிடித்தோம். ஆனாலும் அவர் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டு தான் செல்வார்.
அவருக்காக நாங்கள் மும்பையில் இருந்து கோவாவிற்கு கேரவனை கொண்டு வர முயற்சி செய்தபோது, அவர் அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி, படப்பிடிப்புக்கு தயார் செய்யும் வரை இன்னோவா காரின் உள்ளேயே ஓய்வு எடுத்துக் கொண்டார். மேலும், அவராகவே வெளியே வந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கேட்டு விட்டு போவார். ஒரு காட்சி முடிந்தவுடன் ஒரு நன்றாக வந்திருக்கிறதா? என ஒரு குழந்தையை போல ஆர்வமாக விசாரிப்பதை பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கும்.
எல்லா தயாரிப்பாளர்களுக்கும் என் தாழ்மையான வேண்டுகோள், படப்பிடிப்பில் அவருடன் இருந்து பாருங்கள். எல்லா நேரத்திலும் அவருடன் இருக்க வேண்டுமென உங்களிடம் அவர் கேட்கவில்லை, ஆனால் அவருடைய தேவைகளை புரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களுடையவர். தாங்க முடியாத வெப்பத்தையும், வியர்வைகளையும் தாண்டி அவர் படப்பிடிப்பிற்காக எல்லா இடங்களிலும் பயணம் செய்கிறார்” என்றார்.