சொட்டு தண்ணீரைக் கூட வீணாக்காமல் படமெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
‘அம்மணி’ படத்தைத் தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ‘ஹவுஸ் ஓனர்’.
‘ஆடுகளம்’ கிஷோர், ‘பசங்க’ கிஷோர், லவ்லின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையை மெர்சலாக்கி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் கதையாக மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையோடு தயாராகியிருக்கிறது இந்தப்படம்.
ஏற்கனவே சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் படப்பிடிப்பிற்காக தினமும் 12 லட்சம் தண்ணீரை செலவு செய்து படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்புக்காக பயன்படுத்திய தண்ணீரில் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வீணாக்காமல் அதை மறு சுழற்சி செய்து மீண்டும் அதை பூமிக்கே திருப்பி விட்டோம் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதற்காக சென்னையில் உள்ள பண்ணை நிலத்தில் ஒன்றில் 12 லட்சம் தண்ணீரை நிரப்பி, அதற்குள் ஒரு நிஜ வீட்டைக் கட்டி படக்குழுவினர் நடித்த படகாட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.
நம்மைச் சுற்றி எத்தனையோ பெண்களை குடும்ப பாரத்தை தங்கள் தலையில் ஏற்றிக் கொண்டு துணிச்சலாகவும், தைரியத்துடனும் சமூதாயத்தில் வாழ்ந்து வருகிறார்கள். என்னுடைய படங்களில் என்னை வியக்க வைத்த அப்படிப்பட்ட பெண்களைத் தான் முக்கிய கதாபாத்திரமாக்கி படமாக்கியிருக்கிறேன். அது எனக்கு பிடித்தமானதாக இருந்தது.
ஆனால் இந்தப் படத்தில் என்னைச் சுற்றி என் வாழ்க்கையில் நடந்த நான் அனுபவித்த சம்பவங்களை படமாக்கியிருக்கிறேன். அதே சமயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் படி கமர்ஷியலாகவும் காட்சிகளை படமாக்கியிருக்கிறேன் என்றார்.
ஜூன் மாதம் திரைக்கு வரத் தயாராகியிருக்கும் இப்படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.