வீட்ல சுதந்திரம் இல்லேன்னா எதுக்குங்க தமிழ்நாட்ல இருக்கணும்? : சீறுகிறார் சிம்புவின் தாயார்

‘பீப் சாங்’ விவகாரத்தில் நேற்றுமுதல் சிம்பு மீதான பிடி இறுகத் தொடங்ங்கியிருக்கிறது. சிம்பு- அனிருத் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க அவகாசம் கொடுத்திருந்தாலும் இருவரையும் கைது செய்ய போலீசுக்கு நீதிமன்றம் எந்த தடையும் போடவில்லை.
ஆகையால் சிம்பு – அனிருத் இருவருமே எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற பரபரப்பான சூழல் நிலவி வரும் இந்த நேரத்தில் இதுநாள் வரை தன் முகத்தையே மீடியாக்கள் மத்தியில் காட்டாமல் இருந்த சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் முதல்முறையாக திரையில் தோன்றி பேசியிருக்கிறார்.
என் மகன் என்னங்க தப்பு செஞ்சான் என்கிற தொணியில் இருக்கிற அவரது கண்ணீருடன் கூடிய ஆவேசப் பேச்சு இதோ…
என் மகன் சிலம்பரசன் 6 மாச கைக்குழந்தையிலிருந்தே நடிச்சிக்கிட்டு இருக்கார். அவர் ஒரு கலைஞன் எந்த நேரமும் பாட்டு பாடுறதும், டான்ஸ் ஆடுறதும், வீட்ல சுட்டித்தனமா இருக்கிறதும் அது அவருக்கு ஒரு பழக்கமாகவே இருந்தது.
அவரோட திறமையைப் பார்த்துத்தான் நாங்க அவரை சினிமாவுக்குள்ள கொண்டு வந்தோம். இன்னைக்கு அவருக்கு 30 வயசு ஆகுது. அவர் திருமணமாகாத ஒரு இளைஞன். சும்மா வீட்ல ப்ரெண்ஷுங்களோட இருக்கும் போது பாட்டு பாடிக்கிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கும் போது கம்போஸ் பண்ணின பாட்டு இது.
அது வீட்டுக்குள்ள அவங்க பாடின ஒரு பாடல். அவங்களே அதுல பீப் சவுண்ட்டைப் போட்டு மூடி வெச்சிருக்காங்க. மூடி இந்தப்பாட்டு தேவையில்லேன்னு முடிவு பண்ணி தூக்கிப் போட்ட பாட்டு.
இந்தப் பாட்டை யாரோ இவருக்கு வேண்டாதவங்க எடுத்து வெளியிட்டிருக்காங்க. இது வெளியிட்டதுனால இவ்ளோ பெரிய பிரச்சனையா வந்துருக்கு. ஓ.கே. இதனால ஒரு சில தாய்மார்களோட மனசோ, சில சகோதரிகளோட மனசோ புண்பட்டிருந்தா அதுக்கு நாங்க எங்க குடும்பத்து சார்பா வருத்தம் தெரிவிச்சுக்கிறோம்.
ஆனா நம்ம வீட்ல நமக்கு தனிப்பட்ட முறையில சுதந்திரம் இல்லேன்னா எப்படி நாம இந்த நாட்ல வாழ முடியும்?
நாம வெளியில வரும்போது எப்படி வர்றோம்? வீட்டுக்குள்ள இருக்கும் போது நமக்கு சில பிரைவேஸி வேணும். ஆனா அதை ஒருத்தம் திருடி இணைய தளத்துல போட்டு அதை கண்டுபிடிக்கச் சொல்லி நாங்க கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரைக்கும் அதுக்கு எந்தப் பதிலும் இல்லை.
ஆனால் சிலம்பரசன் மேல மட்டும் கோவை, சென்னைன்னு ரெண்டு இடங்கள்ல வழக்குகள் போட்டுருக்காங்க. இந்த வழக்குள் போட்ட நாள்ல இருந்து பார்த்தீங்கன்னா தினமும் வீட்டு வாசல்ல மீடியா கேமராக்கள் இருக்கு. காலையில இருந்து நடு ராத்திரி 12 மணி வரைக்கும் நிக்கிறாங்க. இதனால் வீட்ல இருக்கிற பெண்கள் எங்களுக்கெல்லாம் ரொம்ப மன உளைச்சலா இருக்குது.
வீட்டு வாசல்ல தண்ணீர் தெளிக்க முடியல… ஒரு கோலம் போட முடியல…?
அவர் என்ன தப்பு பண்ணினார்? தனியா ரிலீஸ் பண்ணினாரா? இல்லை ஏதாவது மேடையில பாடினாரா? இல்லை எந்தப் பெண்கள் கிட்டேயாவது சொல்லியிருக்கிறாரா? இப்படி எதுவுமே அந்தப்பையன் செய்யல. அதிகாரப்பூர்வமற்ற முறையில வெளிவந்த பாடல் இது.
சிம்பு சின்ன வயசுல இருந்தே நடிச்சிக்கிட்டு இருக்கார். தப்போ ரைட்டோ இன்னைக்கு ஒரு நல்ல இடத்துல இருக்கார். மக்கள் மனசுல ஒரு நல்ல இடத்துல இருக்கார். அவரோட படம் ரிலீசாகக் கூடாது. அவர் இன்னும் நல்லபடியா மேலமேல வந்துரக்கூடாதுன்னு சினிமாத் துறையைச் சேர்ந்த சில கலைஞர்கள் இந்த மாதிரி செஞ்சிக்கிட்டு இருக்காங்க.
சினிமாவுல போட்டி பொறாமைகள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் தாண்டித்தான் நாங்களும் முன்னேறி வந்திருக்கோம். அதெல்லாம் சரி. ஆனால் தொடர்ந்து இதை ஒரு வேலையாகவே செஞ்சுக்கிட்டிருக்கிறது தான் என்னன்னே எனக்குப் புரியல.
அந்தப்பையன் ஒரு படம் நடிச்சாக் கூட அந்தப்படத்துக்கு எந்தெந்த வகையில முட்டுக்கட்டை போட முடியுமோ? அந்தந்த வகையில போடுறாங்க. ‘வாலு’ படத்தை ரிலீஸ் பண்றதுக்கு நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை. அடுத்து நாங்க பாண்டிராஜ் டைரக்ஷன்ல எடுத்திருக்கிற ‘இது நம்ம ஆளு’ படத்துக்கும் அடுத்தடுத்த பிரச்சனைகள் வருது.
இப்படி தொடர்ச்சியா சிம்புவுக்கு எதிரான வேலைகளை செஞ்சா அவன் என்ன செய்வான். ஒரு போட்டி இருக்க வேண்டியது தான். அது ஆரோக்கியமான போட்டியாக இருந்தால் பரவாயில்லை. நேருக்கு நேர் மோதினாப் பரவாயில்லை. ஆனால் பின்னாடி இருந்து குத்துறாங்க. அப்படி ஒரு சம்பாத்தியம் தேவைதானா?
என்ன அப்படி ஒரு குற்றத்தை சிலம்பரசன் பண்ணிட்டார்? பொது இடங்கள்ல தப்பா பேசினாரா? ஏதாவது பெண்களை தகாத வார்த்தைகளால பேசினாரா? மைக்கைப் பிடிச்சுப் பேசினாரா? திரைப்படத்துல சொல்லியிருக்கிறாரா? இப்படி எதுவுமே இல்லை.
விளையாட்டா செஞ்சதைப் போய் எடுத்து வெச்சுக்கிட்டு பெரிய குற்றம் செஞ்ச மாதிரி 24 மணி நேரமும் வீட்டு வாசல்ல கேமராக்கள் இருந்தா நாங்கெல்லாம் பெண்கள் எப்படி நிம்மதியா வீட்ல இருக்கிறது.
போலீஸ் தேடுற அளவுக்கு சிம்பு என்ன தவறு செய்தார்? அப்படியும் போலீஸ் தேடுனாலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் தமிழ்நாட்டை விட்டோ, இந்தியாவை விட்டோ எங்கேயும் போக மாட்டார். என் பையனை எந்த போலீஸ்கிட்டேயும் ஒப்படைக்கத் தயார். என்ன நாடு இது? வீட்ல கூட ஒரு சுதந்திரம் இல்லேன்னா எதுக்குங்க நாங்க இந்த நாட்ல இருக்கணும்?
வீட்ல ஒரு தனிமனித சுதந்திரம் இல்லை. நிம்மதியா வாழ முடியல. ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பெருசாக்குறாங்க. எங்க பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொல்ல யாருமே இல்லீங்க…
இது திருடப்பட்ட ஒரு பாடல். இது தூக்கி எறியப்பட்ட ஒரு பாடல். இது பீப் சவுண்ட்டைப் போட்டு மறைக்கப்பட்ட ஒரு பாடல். இப்படி இருக்கும் போது அந்தப் பையனை கார்னர் பண்ணி என்ன செய்யப் போறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?
என் பையனோட உயிர் வேணுமா எடுத்துக்கங்க… இல்லேன்னா அப்படி வளர்த்தப் பையன் தாயோட உயிர் வேணுமா? நான் என்னோட உயிரைக் கொடுக்குறேங்க…
ஒரு சொல்றார் என் பையனை தூக்குல போடணும்னு? அந்தளவுக்கு என் பையன் என்னங்க தப்பு பண்ணிட்டான்?
அந்தப் பையனை வளர்த்தது நான். என்னை தூக்குல போடுங்க… என் மகன் தவறு செஞ்சிருந்தா என்னை தூக்குல போடுங்க… நான் வர்றேன்.
நிம்மதியா தூங்க முடியல, சாப்பிட முடியல, நிம்மதியா இருக்க முடியல. எப்படிங்க இந்த நாட்ல வாழ முடியும்?
தமிழ்நாடு இப்படித்தான் இருக்கும்னா இந்த தமிழ்நாடே எனக்கு வேணாம்க… என்னை விட்டுடுங்க நான் என் குடும்பத்தோட எங்கேயாவது போறேன்.
எனக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம். ஆனால் என்னை வாழ வெச்ச தமிழ்நாடுங்க. இதை விட்டுட்டு போறதுக்கு எனக்கு மனசில்ல..
சிம்பு ஒரு சாதாரண நடிகர். பத்து பேர்ல அவரும் ஒருத்தர். அப்படிப்பட்டவர் அப்படி என்னங்க பண்ணிட்டார். எங்க குடும்பத்தோட நிம்மதியே போயிடுச்சு. அதனால் எங்களுக்கு தமிழ்நாடே வேணாம், நாங்க கேரளாவோ, கர்நாடகாவோ, ஆந்திராவோ எங்கேயோ போய் நடிச்சு பொழைப்பைப் பார்த்துக்கிறோம்.
இதைத் தவிர எங்ககிட்ட சொல்றதுக்கு வார்த்தையே இல்லை. என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.