சீதாராமம்- விமர்சனம்

சீதாராமம் இந்த வாரத்தின் தியேட்டர் புல்லிங் படமாக மாறுவதற்கான எல்லா அம்சங்களோடும் வந்திருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் அடிக்கடி மோதிக்கொள்ளும் காஷ்மீர் எல்லையில் இக்கதை நடக்கிறது. கதைப்படி ராணுவவீரர் துல்கர் ஒரு வானொலி பேட்டியில் தான் யாருமற்ற அனாதை எனச் சொல்கிறார். அதைக்கேட்டு அவருக்கு அண்ணன், தம்பி, மகன் என நிறைய கடிதங்கள் வருகின்றன. அதில் ஒரு கடிதம் கணவன் என்று சொல்லி வருகிறது. அந்தக் கடிதத்தை அனுப்பியவர் நாயகி மிருணாள் தாக்கூர். துல்கர் அவரைத் தேடி விரைகிறார். விடை என்ன என்பதே கதை! அதற்குப் பின்னால் இன்னொரு கதையும் பின்னப்பட்டிருக்கிறது
துல்கர் சல்மான் நடிப்பில் இப்படம் ஓர் மைல்கல். மிகத்தேர்ந்த நடிப்பால் நம்மை படம் நெடுக ஆச்சர்யப்படுத்துகிறார். மிருணாள் தாக்கூர் நம்மை சீன் பை சீன் ஈர்க்கிறார் அழகிலும் நடிப்பிலும். ராஷ்மிகாவின் சிறப்புத் தோற்றம் படத்திற்கும் சிறப்பைச் சேர்த்துள்ளது. துல்கரின் நண்பர்கள் கேரக்டர்ஸ் அனைத்துமே நல்ல தேர்வு. கெளதம் வாசுதேவ்மேனென், பிரகாஷ்ராஜ் இருவரும் சிறிய வேடங்கள் ஏற்றாலும் கதைக்குள் தங்களைப் பொருத்தியிருக்கிறார்கள்
இப்படத்தில் பின்னணி இசை பெரிய ரோல்ப்ளே செய்துள்ளது. விஷால் சந்திரசேகர் விரல் வைத்த இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் அனைத்துமே படத்தின் ஜீவனை காத்துள்ளது. பாடல்களும் தமிழ் வசனங்களும் கவிமழையில் நனைய வைத்துள்ளன. ஒளிப்பதிவின் நேர்த்தி நெடுங்காலம் பேசப்படும்
ஒரு நல்ல திரைக்கதைக்கான மெனக்கெடலும் பேருழைப்பும் படமெங்கும் தெரிகிறது. நில அரசியல் மத அரசியல் எனச் சொல்லி அதற்குள் ஓர் அபாரமான காதலை நுழைத்து செதுக்கப்பட்டிருக்கும் சீதா ராமம் காணத்தக்க படங்களில் ஒன்று
4/5