”கஷ்டப்படுறப்போ கூட நிக்கணும்” : சிவகார்த்திகேயனின் வெள்ளை மனசு

Get real time updates directly on you device, subscribe now.

siva

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அப்படத்தின் இயக்குனர் பொன்ராமுடன் இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வெற்றிக்கூட்டணியின் சார்பில் தயாராகியிருக்கும் புதிய படம் தான் ‘ரஜினி முருகன்.’

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீஸர் ரிலீஸ் பங்ஷனில் ஹீரோ சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியதாவது :

“இது என் 8-வது படம். இந்த படத்தின் டைட்டிலைப் பற்றி பலரும் கேட்டார்கள் எதுக்கு இவனுக்கு இந்த வேண்டாத வேலை இவனுக்கு என்னாச்சு என்பார்களே என்று பயந்தேன்.

‘ரஜினி முருகன்’ கதையை கேளுங்கள் என்றார் இயக்குநர் பொன்ராம். எனக்கு இரண்டே கேள்விகள் இருந்தன. ஏன் இந்த டைட்டில்? இதை எப்படி ஏற்றுக் கொள்ளும்படி செய்யப் போகிறார். ? என்று. ஆனால் கதையை சொல்ல ஆரம்பித்ததும் 20 நிமிஷத்தில் சரியாகத்தான் வைத்திருப்பதாகத் தெரிந்து விட்டது. நம்பிக்கை வந்தது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்குப் பிறகு அடுத்த படம் என்பதில் எனக்கு கொஞ்சம் பதற்றமும் மன அழுத்தமும் இருந்தது. ஆனால் பொன்ராம் படத்தை எப்படி தியேட்டரில் ரசிப்பார்கள் என்று நினைத்து மட்டுமே படத்தை எடுத்தார் அப்படித்தான் ஒவ்வொரு காட்சியையும் எடுப்பார். சூரியண்ணனிடம் பேசிய போது இருவருக்கும் நடிப்பில் சிரிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது. என்றேன்.

Related Posts
1 of 34

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு, ஒரே மாதிரி இருக்குமா என்றெல்லாம் கேள்விகள் வந்தன. அதில் வேலைக்கே போக மாட்டேன் என்றிருக்கும் பாத்திரம் இதில் வேலைசெய்கிற பாத்திரம். அதில் என் குடும்பம் பற்றி பெரியதாக எதுவும் இருக்காது. இதில் நிறைய இருக்கும். பெரிய புதிய முயற்சிகள் எல்லாம் எடுக்கவில்லை. ஜாலியாக சிரித்து விட்டு போக நாங்கள் உத்திரவாதம். படம் பார்த்தோம் ஜாலியாக இருந்தது என்றால் அதுதான் எங்களுக்கு ஆஸ்கார் விருது.

இதில் நடிக்க ராஜ்கிரண்சார் ஒப்புக் கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. கதை பிடித்து ஒப்புக் கொண்டார். அவர் எவ்வளவு பெரிய நடிகர். அவர் கூட நான் நடிக்கிற மாதிரி காட்சி இருக்கிறதோ இல்லையோ எனக்கு பெருமையாக இருக்கட்டும் என்று நான் அவருடன் நடந்து வருகிற மாதிரி ஒரு காட்சியை படமெடுத்து தரும்படி கேட்டேன். ராஜ்கிரண் சார் ஏழுநிமிட காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்தி எல்லாரையும் கலங்க வைத்துவிட்டார்.

சமுத்திரக்கனிசாரிடம் இந்தக் கதை பற்றி நான் பேசியபோது அவர் எனக்கொரு கதை சொல்லி நீ நடிக்கிறாயா? என்றார். அவருக்குப் பிடித்து விட்டது. வில்லன் வேடம் தான். ஆனால் பெரிய பெரிய சண்டை எல்லாம் போட மாட்டார். அமைதியாக இருந்து நரித்தனம் செய்கிற வில்லன்.

இந்தப் படத்தில் 4 பக்க வசனம் எழுதித் தந்தால் நாங்கள் 10 பக்கம் பேசுவோம். கடைசியில் இயக்குநர் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் ‘படமே மூன்றரை மணிநேரம் இருந்தது. இயக்குநர் தான் குறைத்தார். தமிழ் பேசத் தெரிந்த படிக்கத்தெரிந்த அழகான கதாநாயகி கீர்த்தி சுரேஷ்.

பலரும் கேட்டார்கள் ஏன் இந்தப் பேனரில் படம் செய்கிறாய் என்று. அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்றனர். எல்லாருக்கும்தான் பிரச்சினை இருக்கிறது. நாம் படம் எடுத்தோம். ஓட வேண்டும் ஜெயிக்க வேண்டும் என்பதை விட அது கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு கூட நிற்கிற மாதிரி இருந்தால் அது மகிழ்ச்சி தானே? படம் வரும் போகும், ஓடும் ஓடாது.

ஆனால் மனுஷனாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் அதனால் இப்படிப் பட்டவர்களோடு சேர்ந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். சோதனையை சந்தித்தால் தான் சாதனை.” இவ்வாறு பேசினார்.