துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ‘மசாலா காஃபி’ இசைக்குழு!
‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி வரும் படம் ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”.
தேசிங்க் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ரிது வர்மா நடித்து வருகிறார்.
மெல்லிய காதல் கதையான இப்படத்தில் கேரளாவின் மிகவும் பிரபலமான இசைக் குழுவான மசாலா காஃபி இசைக்குழு இணைந்திருக்கிறது. ஆமாம், இந்த இசைக்குழு தான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்கள்.
திறமை எங்கிருந்தாலும் அவர்களை ஊக்குவிப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட இயக்குனர் தேசிங் இதுபற்றி கேட்டபோது, “இயற்கையாகவே, அழகான துல்கர் மற்றும் நேர்த்தியான ரிது வர்மா நடிப்பதால் இசை மூலம் இந்த காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். அதை இந்த இளைஞர் குழு மிகச்சரியாக செய்யும் என நாங்கள் நினைத்தோம்.
எற்கனவே இவர்கள் ‘உறியடி’ படத்திற்கு இசையமைத்திருந்தாலும், அவை இவர்களின் முந்தைய ஆல்பங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. ஆனால் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் பாடல்கள் புதியதாக இருக்கும். படத்தில் வெவ்வேறு வகையான நான்கு பாடல்கள் உள்ளன, மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும். சமூக ஊடகங்களில் இந்த இசைக்குழுவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் இவர்களை இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய முக்கிய காரணம்” என்றார்.
நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என முழுக்க, முழுக்க இளைஞர்களை கொண்டு தயாராகி வரும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் துல்கர் சல்மானின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.