விருதுகள் தான் எங்களின் அடையாளம் : சைலண்ட்டாக கலக்கும் சவுண்ட் என்ஜினியர்!

ஒரு படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கோ, காட்சிகளோடு ஒன்றி ரசிக்க வைக்கும் பரபரப்பான பின்னணி இசைக்கோ கிடைக்கின்ற வரவேற்பும், புகழும் படத்தின் இசையமைப்பாளருக்கு மட்டுமே சொந்தமாகி விடுகிறது.
அதன் பின்னணியில் இரவு, பகல் பாராமல் உழைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இருக்கிறது. அப்படிட்டவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் என்றால் அது அவ்வப்போது அவர்களை வந்து சேரும் விருதுகள் தான்.
அப்படி ஒரு அங்கீகாரமாக ‘பேராண்மை’ படத்துக்காக சிறந்த சவுண்ட் என்ஜினியர் விருதுக்கு தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பிரபல சவுண்ட் என்ஜினியர் உதயகுமார்.
லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் KNACK ஸ்டூடியோவில் ‘விவேகம்’ படத்தின் மிக்சிங்கில் இருந்தவர் விருது அறிவிப்பின் சந்தோஷ தருணங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்…
”95-98ல பிலிம் இன்ஸ்டியூட்ல சவுண்ட் என்ஜினியர் படிச்சேன். அதுக்கப்புறம் 2000 – 2008 வரை ‘ஊமை விழிகள்’ உட்பட ஆபாவாணன் சாரோட எல்லாப் படங்களுக்கும் வேலை செஞ்ச தீபன் சட்டர்ஜிங்கிற லெஜண்ட்கிட்ட உதவியாளராக இருந்தேன். அவர்கிட்ட தொழிலைக் கத்துக்கிட்டதுக்கப்புறம் தனியா வந்து படங்களுக்கு சவுண்ட் என்ஜினியரா வேலை செய்ய ஆரம்பிச்சேன். அப்படி தனியா வந்ததுக்கப்புறம் 3 வது வருஷத்திலேயே ‘பேராண்மை” படத்துக்காக எனக்கு தமிழக அரசோட திரைப்பட விருது அறிவிச்சிருக்காங்க.
காடு சம்பந்தப்பட்ட காட்சிகள், ராக்கெட் லாஞ்ச் ஆகிய விஷயங்கள் தான் அந்தப்படத்துல எனக்கு மிகப்பெரிய சவாலா இருந்துச்சு. ஒரு மரத்தை வெட்டுறப்போ கூட அதோட சவுண்ட் எப்படி இருக்கும்னு யூகிச்சுப் பண்ணினேன். கமர்ஷியலோ, யதார்த்தப் படமோ எல்லாவற்றுக்குமான வேலைகள் ஒன்று தான். அதுக்கேத்த மாதிரி வேலை செய்வேன்.
‘விவேகம்’ படத்துல சவுண்ட்டுக்கான ஸ்கோப் நெறைய இருக்கு. அதுல சவுண்ட் விஷயங்களை கொண்டு வர்றது தான் ரொம்ப முக்கியம். ‘நந்தலாலா’, ‘விசாரணை’க்கு அப்புறம் ‘விவேகம்’ படம் தான் எனக்கு சேலஞ்சிங்கா இருந்துச்சு.”
”சத்தத்தைப் பற்றி எப்போதுமே நான் யோசிச்சிக்கிட்டுருப்பேன். உதாரணமா பீச்சுக்குப் போனா அங்க அடிக்கிற காற்றோட சத்தம் எப்படி இருக்கு? எந்த அளவுல அடிக்குதுன்னு மனசுல போட்டு வெச்சுப்பேன். ஒரு ஜெனரேட்டர் சத்தத்தைக் கூட கூர்மையா கவனிப்பேன். எந்த இடத்துல இருந்தாலும் குண்டூசி சத்தமா இருந்தாக் கூட அதை காதுல வாங்கிக் கொள்வேன்.’’ என்று சொல்லும் உதயகுமார் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் கமர்ஷியல் படங்கள் என்றால் அதற்கு ஸ்பெஷலாக வேலை செய்ய வேண்டியிருக்குமாம்.
ஆமாம், ஏன்னா அவங்கள மாதிரி முன்னணி ஹீரோக்களோட படங்களுக்கு முதல் ரெண்டு மூணு நாளைக்கு ரசிகர்கள் குவிஞ்சிருவாங்க. தியேட்டருக்குள்ள விசில் சத்தம், கூச்சல், கைதட்டல்ன்னு கொண்டாடுவாங்க. அந்த மாதிரி நேரத்துல திரையில பேசுற டயலாக்குகள் ரசிகர்கள் சத்தத்தை மீறி அவங்களுக்கு கேட்கணும்னு அதுக்காகவே சத்தத்தை அதிகமாக்கி வைப்பேன்.” இன்னைக்கும் என்னைத் தேடி வர்றவங்க ”விசாரணை” படத்துல ஹீரோவை போலீஸ் அடிக்கிற அந்த அடி மாதிரி சவுண்ட் கொடுங்களேன்னு கேட்பாங்க” என்று ஆச்சரியப்படுத்துபவர் சமீபத்தில் தான் சைமா விருதையும் கைப்பற்றி வந்திருக்கிறார்.
இந்த மாதிரி விருதுகள் தான் எங்களுடைய அடையாளம். அதுதான் எங்களுக்கு சந்தோஷத்தையும், இன்னும் உழைக்கணும்கிற உத்வேகத்தையும் தருது என்கிறார். கைவசம் ‘விவேகம்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘வீரா’, ‘நெருப்புடா’, ‘செம போதை ஆகாத’ என தனது டெக்னிக்கல் சவுண்ட்டை சைலண்ட்டாக தொடர்ந்து கொண்டிருக்கிறார் உதயகுமார்.
சீக்கிரமே தேசிய விருது என்கிற பெருமிதமும் வந்து சேரட்டும்!