இன்று முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை! – தொடங்கியது தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்
தியேட்டர்களில் டிஜிட்டல் சாதனங்கள் மூலமாக திரைப்படங்களை வெளியிடும் தொழில் நுட்பப் பணிகளைச் செய்து வரும் கியூப் உள்ளிட்ட நிறுவனங்களின் அவர்களுடைய சேவைக் கட்டணங்களைக் குறைக்கா விட்டால் மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யப்போவதில்லை என்று முடிவு செய்தது தெலுங்கு திரைப்பட உலகம். அவர்களின் இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உட்பட தென்மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து திரைப்பட அமைப்புகளும் முடிவு செய்து அறிவித்திருந்தன.
இதையொட்டி ஏற்கனவே மூன்று முறை டிஜிட்டல் நிறுவனங்களுடன் திரையுலகினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, மார்ச் 1 இன்று முதல் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில்லை என்று போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.
இது குறித்து முடிவெடுக்க நேற்று மாலை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் கூறியிருப்பதாவது, “டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்ஸ் உடன் இதுவரையிலும் நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்தவித உடன்படிக்கையும் ஏற்படாததால், ‘இனி அவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை’ என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக இனிமேல் தியேட்டர் உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. Handling Charges-ஐ மட்டுமே செலுத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம்.
தியேட்டர் உரிமையாளர்களே Projector and Server-ஐ சொந்தமாக வைத்துக் கொண்டிருக்கும் தியேட்டர்களுக்கு மட்டுமே திரைப்படங்களை திரையிட கொடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தரக்கோரி திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம், தெனிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமேளனம் ஆகிய அமைப்புகளை கேட்டு கொள்கிறோம்.
புதிய திரைப்படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்கு கடிதம் அளிக்கவிருக்கிறோம். இந்த பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பிரச்சினையை விரைந்து முடித்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.
இந்த பிரச்சனை சம்பந்தமாக தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் ஒரு குழு அமைக்கப்படும்..” என்றார்கள்.
மேலும், “தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த நலன் கருதி நமது சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவினை எந்தத் தயாரிப்பாளர் மீறீனாலும் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்…” இவ்வாறு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. அதே நேரம் இந்த போராட்டம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.