முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் டிஜிட்டல் நிறுவனங்கள்! – ஸ்டிரைக் தொடர்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

கியூப், யூ எப்.ஓ உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து தென்னிந்திய திரையுலகம் தொடங்கிய போராட்டம் தொடர்கிறது என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கடந்த ஒரு மாத காலமாக நமது திரைத்துறையின் நலன் கருதி தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் (இன்று 5.3.2018) ஹைதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜாயிண்ட் ஆக்ஷன் கமிட்டியின் சார்பில் ஏற்கனவே டிஜிட்டல் சேவை நிறுவங்களுக்கு வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள்.
நாம் எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்த பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து நம் தரப்பில் விசாரித்த போது ”ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தை நடக்கும் போது டிஜிட்டல் நிறுவனங்கள் மாற்றி மாற்றி பேசுகின்றன. ஒருமுறை 15 சதவீதம் குறைக்கிறோம் என்கிறார்கள். அடுத்த பேச்சு வார்த்தையில் நாங்கள் 15 சொல்லவில்லை, 10 தான் சொன்னோம் என்று மாற்றிப் பேசுகிறார்கள். பிறகு இல்லை நாங்கள் 9 சதவீதம் தான் குறைப்போம் என்கிறார்கள்.
இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதால் இதில் இறுதித் தீர்வை எட்டும் வரை போராட்டத்தை தொடர்வது என்கிற உறுதியான முடிவில் தான் கேரளா, கர்நாடகா ஆகிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் போராட்டத்திலிருந்து வெளியேறிய பிறகும் கூட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தங்களது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.