பிரபல ஆன்லைன் திருட்டு வி.சி.டி அட்மின் சென்னையில் கைது!

Get real time updates directly on you device, subscribe now.

online2

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது ‘திருட்டு வி.சி.டி’.

காலப் போக்கில் திரையுலகினரின் முயற்சி மற்றும் காவல் துறை உதவியோடு அவர்களின் அந்த சட்டவிரோதச் செயலுக்கு ஓரளவுக்கு முடிவு கட்டினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்லைன் வழியாக புதிய படங்களை திருட்டுத் தனமாக வெளியிடுவது அதிகரித்தது.

ரோட்டோரத்தில் கடை போட்டு சிடி விற்பவர்களை கையும், களவுமாக பிடிபடுவது போல இணையதளத்தில் புதுப்படங்களை வெளியிடுபவர்களை கண்டுபிடிப்பது திரையுலகினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

குறிப்பாக இந்த சட்ட விரோத வேலையைச் செய்வதில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ மற்றும் ‘தமிழ் கன்’ ஆகிய இரண்டு இணையதளங்கள் பிரபலமானவை.

Related Posts
1 of 9

சம்பந்தப்பட்ட அந்த சட்ட விரோத இணைய தளங்களை நடத்துபவர்கள் யார்? எங்கிருந்து இயக்குகிறார்கள்? போன்ற விபரங்களை கண்டுபிடித்து அவர்களை நெருங்குவதே சவாலாக இருந்தது.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்றதும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ உள்ளிட்ட ஆன்லைனில் தமிழ்ப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை விரைவில் ஒழித்துக் கட்டுவேன் என்று அறிவித்திருந்தார்.

இந்த சூழலில் இன்று மாலை சென்னையில் ‘தமிழ் கன்’ இணைய தள நிர்வாகி வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரி சங்கர் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை திருவல்லிக்கேனி D1 காவல்நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தத் தகவலை கேள்விப்பட்டதும் காவல் நிலையத்திற்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வந்தார்.

அப்போது பேசிய அவர் … ”திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது தொடர்பாக இணையதள நிர்வாகி ஒருவர் பிடிபட்டுள்ளார், கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும்” என்றார்.