பாஜகவின் துரோகத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது! : தங்கர்பச்சான் காட்டம்

மாணவி அனிதா தற்கொலையைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் நீட்டை ரத்து செய்யக்கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் மத்தியில் ஆளும் பாஜக கட்சி நடத்தும் நேர்மையற்ற அரசியலுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :
பாஜக கட்சியின் நேர்மையற்ற அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு இழைத்து வந்த துரோகத்திற்கும், அநீதிக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
இதுவரை தங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்ட மக்களும், நமக்கு இதில் என்ன பலன் கிடைக்கும் என்று நடந்து கொண்ட அரசியல் கட்சிகளும் இனியாவது மாற வேண்டும்.
தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை முடக்கும் அடுத்தத் திட்டங்களில் ஒன்று தான் “நீட்” தேர்வு. இந்த சதியை மாணவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இப்போது அவர்களுக்கு பக்க பலமாக இருந்து இனி எக்காலத்திலும் தமிழகத்திற்குள் அனுமதிக்காத முறையில் சட்டத்தை உருவாக்கி மாநில அரசின் உரிமையை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராட்டம் நடத்தி வேலை நிறுத்தம் செய்து தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் பகையை மறந்துவிட்டு ஓரணியில் திரண்டு சாதித்துக் காட்ட வேண்டும். மாணவர்களும், இளைஞர்களும் காலம் தாழ்த்தாமல் இந்தக் கோரிக்கையை அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் உடனே விடுக்க வேண்டும்.
இதைத் தவிர்த்து ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டம் நடத்தினால் எக்காலத்திலும் நம் உரிமையை பெற முடியாது. எனவே தமிழக மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், கட்சி பாகுபாடு கடந்து நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள கேட்டுக் கொள்வோம்! நமது உரிமையை நிலைநாட்டுவோம்! இவ்வாறு தங்கர் பச்சான் தெரிவித்திருக்கிறார்.