யாருக்காக அழுதார் சிவகார்த்திகேயன்? : வெளிவந்தது ரகசியம்
‘ரெமோ’ வெற்றி விழா மேடையில் சிவகார்த்திகேயன் கண் கலங்கிய விவகாரம் இன்னும் சைலண்ட் ஆனபாடில்லை.
நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று சிவகார்த்திகேயன் சொன்னாலும், வளர்த்து விட்டவர்களை மறந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
அதோடு அவர் மேடையில் அழுததையும் ரசிகர்கள் உட்பட பலரும் கிண்டல், கேலி, நையாண்டி, எகத்தாளம் என எல்லாமுமாக மீம்ஸ்களால் வறுத்தெடுத்து விட்டார்கள். குறிப்பாக தந்தி டிவியில் வந்த அவருடைய பேட்டியும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரெமோ மேடையில் அழுததற்கு என்ன காரணம் என்பது குறித்து பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் “எனக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது, அதனால் தான் அழுதேன் என்று பலரும் நினைக்கிறார்கள். எனது 30 வருட வாழ்க்கையில் பிரச்சினை எப்போதுமே இருந்திருக்கிறது. சினிமாவில் சமீபகாலமாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். ‘ரெமோ’ திரைப்பட தயாரிப்பாளர் ராஜா அண்ணாவின் உழைப்பைப் பார்த்து என்னை அறியாமல் வந்த கண்ணீர் தான் அது.
அந்த இடத்தில் நான் எனது உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இனிமேல் அழ மாட்டேன். என்னை மாதிரி ஒரு துறையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்களுக்குத் தான் எனது கஷ்டம் புரியும். அந்த இடத்தில் அழாமல் ராஜா அண்ணனை தனியாக கட்டிப்பிடித்து அழுதிருக்கலாம். இனிமேல் என் உணர்வுகளை யாரிடம் காட்ட வேண்டுமோ, அவர்களிடம் மட்டும் காட்டிக் கொள்வேன். பிரச்சினைகளுக்குள் போகாமல் சந்தோஷமாக படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
என்னுடைய வளர்ச்சியம் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று பார்க்கிறேன். தற்போது இருக்கும் பிரச்சினைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று போகக் கூட நான் விரும்பவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் முடிவு பெறும் என நினைக்கிறேன். இனிமேல் இதே போன்றதொரு பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வேன்.” என்று தன் அழுகைக்கான காரணத்தை கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.