‘வாலு’ ரிலீஸ் சிக்கல் : தானும் குழம்பி ரசிகர்களையும் குழப்பிய டி.ஆர்!
எப்போதோ ரிலீசாகியிருக்க வேண்டிய சிம்புவின் ‘வாலு’ திரைப்படம் நிதி உள்ளிட்ட கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகளால் தள்ளிக்கொண்டே போகிறது.
பல தேதிகள் அறிவித்தும் ரிலீசாகாமல் போகவே படத்தை சிம்புவின் அப்பாவும், நடிகருமான டி.ஆர் வாங்கி தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் வெளியிடப் போவதாக அறிவித்தார்.
வருகிற 17-ஆம் தேதி உலகமெங்கும் படம் ரிலீசாகும் என்று பேப்பர்களில் தொடர்ச்சியாக விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘வாலு’ படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, படத்தை ரிலீஸ் செய்வதற்கான 4 மாநில உரிமையை எங்களுக்கு வழங்கியிருந்தார். ஆனால், தற்போது வேறு யார் மூலமோ படம் ரிலீசாக உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, படம் ரிலீசாவதற்கு இடைக்காலத்தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்பாளர், இதுகுறித்து வரும் 13ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ‘வாலு’ படத்தின் இடைக்கால தடை குறித்து டி.ராஜேந்தர் பேசியதாவது :
‘வாலு’ படம் ஜூலை 17ம் தேதி ரிலீசாகப் போகிறது என்று கடந்த 20 நாட்களாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் வழக்கு போட்டவர்கள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. இப்போது ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் வழக்கு போட்டிருப்பதைப் பார்த்தால் சிம்பு படம் ரிலீசாகக் கூடாது என்று வேண்டுமென்றே சிலர் சதி வேலைகளை செய்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஜூலை 13ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் நீதிபதி என்ன தீர்ப்பளித்தாலும் அதற்கு நான் தலை வணங்குவேன். நான் கடவுளை நம்புகிறவன். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். தீர்ப்பு வரும் வரை எனது ரசிகர்களும், சிம்புவின் ரசிகர்களும் அமைதி காக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
மேலும் என் மகன், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்களில் நடித்தான். இரண்டு படங்களும் நிதிச்சிக்கலில் தவித்தது. தனக்கு உரிய சம்பளம் கிடைக்கவில்லை என்ற போதிலும் தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ‘வாலு’ படத்தை முடித்து கொடுத்தார் என் மகன். அப்படிப்பட்ட நல்ல மனம் படைத்தவன் என் மகன் சிம்பு.
என்று பேசிய டி.ஆர் கடைசியில் இந்தப் படத்தை ரம்ஜான் மாதம் ஆரம்பித்த தேதியில் இருந்து விளம்பரப்படுத்தி வருகிறேன். கடவுள் மனசு வைத்தால் ‘வாலு’ ரிலீசாகும் என்று சொல்லி ரசிகர்களை குழப்பினார். இதனால் மீண்டும் ‘வாலு’ படம் 17-ஆம் தேதி ரிலீசாகுமா? ஆகாதா? என்கிற பெருங்குழப்பம் சிம்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதற்கு சிம்புவாவது தெளிவான விளக்கம் தருவாரா..?