உடன்பிறப்பே- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

இரா.சரவணனை பாரதிராஜாவாகவும் ஜோதிகாவை ராதிகாவாகவும் நினைத்துக் கொண்டு..இது கிழக்குச் சீமையிலே-2 என்ற நினைப்பில் படத்தைப் பார்த்தால் சிறிய ஏமாற்றம் கிடைக்கும். அதாவது எதிர்ப்பார்ப்பின்றி படம் பார்க்க அமருங்கள் என்பதே முதல் வேண்டுகோள்..

அண்ணனுக்கு தங்கையும் தங்கைக்கு அண்ணனும் அன்பு காட்டுவதில் சளைத்தவர்கள் அல்ல. இப்படியான அண்ணன் தங்கை இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்கின்றனர்? அதற்கான காரணம் என்ன? எந்தக் காரணத்திற்காக அண்ணன் தங்கை பிரிந்து நிற்கிறார்கள்? அந்த அண்ணன் தங்கை எந்தக் காரணத்தைக் கொண்டு மீண்டும் இணைகிறார்கள்? இதற்கான பதில் உடன்பிறப்பே

ஜோதிகாவை வைத்தும் சின்ன கேரக்டர்களை வைத்தும் போகிற போக்கில் சமூகம் சார்ந்த விசயங்களை படத்தில் அவ்வப்போது விதைத்து கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் இரா.சரவணன். கத்துக்குட்டியில் விவசாயப் பிரச்சனைகளை கனமாக சொன்னவர், இந்தப்படத்தில் அண்ணன் தங்கைப் பாசத்தை அழகியலோடு சொல்ல முயன்றிருக்கிறார்.

Related Posts
1 of 10

வெகு இயல்பாக நடிக்கும் ஜோதிகாவிற்கு இதில் சற்று அதிகமாக நடிக்க வேண்டிய வேடம். அவரும் சற்று அதிகமாகவே நடித்திருக்கிறார். வழக்கமான சசிகுமார் எகிறி அடிக்கவும் செய்கிறார்… எமோஷ்னல் காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். சமுத்திரக்கனி கொடுத்த வேலைக்கு குறைவின்றி நடித்துள்ளார். சூரியின் கால்ஷீட் மிகக்குறைவாக வாங்கப்பட்டிருக்கும் போல..குறைந்த காட்சிகளில் தான் வருகிறார். வரும் இடங்களில் எல்லாம் வசீகரிக்கிறார். ஆடுகளம் நரேன், கலையரசன் கேரக்டர்கள் படத்திற்குள் இருந்தாலும் படத்திற்கு வெளியே இருப்பதாகவே தெரிகிறது. திரைக்கதையில் விழுந்த சிறிய ஓட்டை இது

படத்தின் ப்ளஸ் பாயிண்ட்களில் முக்கியமானது படத்தின் நேட்டிவிட்டி. மற்றும் மேக்கிங். தஞ்சை அழகை நெஞ்சை அள்ளும் அளவில் காட்டியிருக்கிறார்கள். இந்தப்படத்திற்குள் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வை பல இடங்களில் ரசிக்க முடிகிறது. இமானின் இசையும் கிராமிய வாழ்விற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவின் பங்கு படத்திற்கு பெரும் பலம்

வசனங்களில் செலுத்திய கவனத்தை படத்தின் பின்பாதியில் சிதறிச் சென்ற திரைக்கதையிலும் செலுத்தி இருந்தால் என் இனிய உடன் பிறப்பே என கொண்டாடி இருக்கலாம்

2.5/5