உலக நாயகனுக்காகவே உருவான ‘சிங்கிள் கிஸ்’ பாடல்! : சிலிர்க்கும் ஜிப்ரான்
எத்தனை தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெரிந்து கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படம் மே 1-ம் தேதி உலகமெங்கும் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பான இப்படத்தின் பாடல்கள் ரிலீசான நாளில் இருந்தே இசையமைப்பாளர் ரசிகர்கள் மத்தியில் காலர் ட்யூனாகவும், ஐ டியூன்களாகவும், ஸ்மார்ட்போன் டவுண்லோடாகவும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
எந்த ஒரு புதுமுக இசையமைப்பாளருக்கும் உலகநாயகனுடன் இணைய கிடைக்காத வாய்ப்பு ஜிப்ரானுக்கு கிடைத்திருக்கிறது. அதனாலோ என்னவோ கமல்சாருக்காகவே சிங்கிள் கிஸ் பாடலை உருவாக்கியதாக கூறினார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
“கமல் என்றாலே அவர் முத்தத்துக்கு அடையாளமாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறார். அதனால் தான் ‘சிங்கிள் கிஸ்’ பாடலை அவருக்கென்றே உருவாக்கினோம். இந்த பாடல் காட்சியில் அவருடைய டான்ஸ் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதால் நாடன இயக்குநர் ஷோபியும் நானும் எங்களது அதிகபட்ச உழைப்பைக் கொட்டி இந்தப்பாடலை உருவாக்கினோம்.
இந்த பாடலுக்காகவே ஸ்பெஷலாக பாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட வித்தியாசமான இசைக்கருவிகளைக் கொண்டு இசையமைத்திருப்பதால் பாடலும் சிறப்பாக வந்திருக்கிறது.
‘காதலாம் கடவுள் முன்’ ஆன்மாவின் ஏக்கத்தையும், காதலின் வலியையும் உணரவைக்கும் பாடலாகவும் அமைந்திருக்கிறது.
இந்தப்படத்தில் உள்ள எல்லாப் பாடல்களிலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இரணியன் நாடகப் பாடல்தான். அதன் காட்சி அமைப்புகள் அற்புதப் பதிவாக அமைந்திருக்கின்றன. இந்தப்பாடல் வரும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் திருவிழா கொண்டாடப் போவது நிஜம் என்று சிலிர்த்தார் ஜிப்ரான்.
கொண்டாட்டத்துக்கு இன்னும் ரெண்டே நாள் தான் பாக்கி ப்ரோ..!