புகழ்பெற்ற ‘சிம்பா’ கேரக்டருக்கு குரல் கொடுக்கும் சித்தார்த்
2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி நிறுவனம், தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையில் ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்தி ரசிகர்களுக்கு வழங்குகிறது.
அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பு எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது.
அழகிய சிங்க குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தை பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது.
லைவ் ஆக்ஷன் பதிப்பை பெரிய திரையில் பார்க்கக் காத்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு, ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது டிஸ்னி இந்தியா. வரலாற்றில் மிகவும் விரும்பப்படும் திரைப்பட கதாபாத்திரங்களில் ஒன்றான சிம்பாவிற்கு, அதன் தமிழ் பதிப்பில் பிரபல நடிகர் சித்தார்த் குரல் கொடுக்க இருக்கிறார்.
“லயன் கிங்கை திரையில் மற்றும் மேடையில் நான் முதன்முதலில் பார்த்ததை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. இந்த காலத்தால் அழியாத கிளாசிக் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பாவாக நான் பேசுவதும், பாடுவதும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் எனது புதிய அவதாரத்தை எனது பார்வையாளர்களுடன் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்”என மிக உற்சாகமாக பேசுகிறார் சித்தார்த்.
‘அயர்ன் மேன்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ புகழ் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படம் வரும் ஜூலை 19-ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.