இசைஞானி பெயரை சொல்வதற்கு தயக்கம்-சந்தோஷ் நம்பிராஜன்!

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கந்தசாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘வட்டார வழக்கு’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.
நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், “இந்தப் படத்தில் யாரும் கஷ்டப்பட்டு வேலை செய்யவில்லை இஷ்டப்பட்டு தான் வேலை செய்து இருக்கிறோம். இசைஞானி அவர் பெயரை சொல்வதற்கு கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. அவரது இசையில் நடித்துள்ளது எனக்குப் பெருமையாக உள்ளது. இயக்குநர், ரவீனா எனப் படக்குழுவினர் அனைவருமே அவரவர் சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். இப்போது எல்லாம் சின்ன படங்களை வெளியிடுவது கஷ்டம், தியேட்டர் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். நீங்கள் ஒரு தரமான படத்தை எடுத்தால் அதை வெளியிடுவதற்கு சக்திவேல் சார் தயாராக இருக்கிறார். நீங்கள் உழைப்பையும், படத்தையும் நேர்மையாக கொடுத்தால் உங்களுக்கான அங்கீகாரமும் அடையாளமும் விருதுகளும் தானாக வந்து சேரும் என்பது நிச்சயம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.