‘ஆருத்ரா’ படத்தில் காட்சிகள் ‘கட்’! – பா. விஜய் மீது விக்னேஷ் வருத்தம்

Get real time updates directly on you device, subscribe now.

மிழ் சினிமாவின் பெரிய பெரிய ஜாம்பவான்களான ‘பாரதிராஜா’, ‘பாலுமகேந்திரா’ ‘வீ.சேகர்’ உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் சுமார் 52 படங்களில் நாயகனாக நடித்தவர் தனது 52 வது படமான ‘ஆருத்ரா’ வில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார்.

திடீரென்று ஏன் இந்த வில்லன் வேஷம்? என்று அவரிடம் கேட்டோம்…

எனக்கு சினிமா மோகம் அதிகம். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமா தான். பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் சோர்ந்து போய் விட வில்லை.

சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒருநாள் ஒரு கதையை சொல்லி என்னை நடிக்க கேட்டார். கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு கொடூர வில்லனா? என்று தயங்கினேன்.

ஏன் விக்னேஷ் தயக்கம்? இந்த கதையில் சித்தார்த் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடிக்க இருந்த படம் இது. மிஸ்ஸாகி விட்டது இப்ப நான் ஹீரோ நீங்க வில்லன், இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படணும்னு நினைத்து தான் இந்த படத்தை எடுக்கிறோம். நீங்க நடிங்க கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னார். நடித்து படத்தோட டப்பிங் முடிந்த பிறகு தான் இவ்வளவு கொடூரமான வில்லனாகவா நடிச்சோம் என்று யோசிச்சேன்.

படத்தில் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்கிற மாதிரி நான் திருந்துகீற காட்சியை எடுத்த இயக்குனர் அதை கட் செய்தது எனக்கு வருத்தம் தான். இதன் மூலம் ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள். தயவு செய்து நண்பர்கள் சொந்தக்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களை குழந்தைகளுடன் அளவோடு பழக விடுங்கள் என்பது தான்.

என்றவரிடம் பாலா இயக்கத்தில் ‘சேது’ படத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து, அது மிஸ்ஸான காரணம் என்ன விக்னேஷ்? என்று கேட்டோம்…

அதை நினைத்து தினமும் வருத்தப்படுவேன். பாலாவும் நானும் ரூம் மேட்ஸ். பல பிரச்சனைகளை சந்தித்ததால் நான் நடிக்க முடியாமல் போச்சி. ஆனாலும் என் நண்பன் இன்னிக்கி ஜெயிச்சி தலை நிமிர்ந்து இருக்கிறது எனக்கு பெருமையா இருக்கு. இதை விட கொடூரமான வில்லனா பாலா கூப்பிட்டு நடிக்க சொன்னா…? நடிப்பேன். நடிப்பு தானே..

‘சேது’ மாதிரி பாலு மகேந்திராவின் ‘வண்ண வண்ண பூக்கள்’ படமும் ‘ஏழு நாட்கள்’ நடிச்ச பிறகு மாற்றப்பட்டேன். அந்த வலியெல்லாம் இன்னும் போகலே. போராடிட்டே இருப்பேன், நிச்சயம் ஜெயிப்போம் என்றார் விக்னேஷ் நம்பிக்கையுடன்..!