சினிமா எனக்கு கொடுத்ததை திருப்பி சினிமாவுக்கு கொடுக்கிறேன்! : விஜய் சேதுபதி பெருமிதம்
”உலகாயுதா” சார்பில் தமிழ்த் தேசிய சலனப்படம் 100-வது ஆண்டை ஒட்டி 100 மூத்த திரைப்பட தொழிலாளர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதற்கான மொத்த செலவையும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டார். மொத்தம் 100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அதில் முதல் பதக்கத்தை நடிகர் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு விஜய் சேதுபதியின் தாயார் வழங்கி கவுரவப்படுத்தினார். 33 துறைகளை சார்ந்த 99 தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வழங்கினர்.
”ஆயிரத்தில் ஒருவன்” உட்பட 50 படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் விருது வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டார். விருது வழங்க வந்த அவருக்கும் ஒரு விருதை வழங்கி சிறப்பித்தனர் விழாக்குழுவினர். விருது வாங்கிய பின் ஆர்.கே.சண்முகம் பேசும்போது, “எனக்கு வயது 87, மனதளவில் எனக்கு வயது வெறும் 27 தான். அதனால் இங்குள்ளவர்களிலேயே நான் தான் இளைஞன். தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் எதுவும் இப்போது வருவதில்லை. ஆனால் அதில் ஜனநாதன் விதிவிலக்கு. அவர் ஒரு புரட்சி இயக்குனர். அவரின் ”பேராண்மை” படத்தை நான் ஐந்து முறை பார்த்து ரசித்திருக்கிறேன், நல்ல படங்கள் நிறைய வர வேண்டும்” என்றார்.
பணம் இருப்பனிடம் குணம் இருக்காது, குணம் இருப்பவனிடம் பணம் இருக்காது. இந்த இரண்டும் விஜய் சேதுபதியிடம் இருக்கிறது. ஜனநாதனிடம் குணம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை. பணம் சேர்க்கும் நோக்கமும் இல்லை. ஜாக்கிசான், அர்னால்டு, ரஜினி, கமல், விஜய், அஜித் பலரும் கலந்து கொண்ட விழாக்கள் சென்னையில் நடந்துள்ளன. அதை விட இந்த விழாவை முக்கியமான விழாவாக நான் கருதுகிறேன். இந்த அரங்கம் நிறையவில்லை என்றாலும் இங்கு வந்துள்ள அனைவரின் மனமும் நிறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தில் பெரிதாக என்ன வாங்கி விட முடியும்? என நினைக்கலாம். அது இத்தனை காலம் சினிமாவில் உழைத்தவர்களுக்கான அங்கீகாரம் என்றார் இயக்குனர் அமீர்.
100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கும் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசும்போது, “நான் பெரிதாக எதையும் கொடுத்து விடவில்லை. சினிமா எனக்கு கொடுத்ததில் இருந்து கொஞ்சம் எடுத்து, சினிமாவிற்கு கொடுக்கிறேன். சினிமா தான் என்னை அங்கீகரித்தது. சினிமா தான் எனக்கு எல்லாம். ஒரு ஹீரோவாக நான் நடித்த முதல் படத்திலேயே எனக்கு சினிமா தொழிலாளர்கள் கொடுத்த மரியாதை என்னை ரொம்பவே நெகிழ வைத்து விட்டது. என்னை கவுரவித்த என் இயக்குனர் ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்கிறேன். இதை கூட அவர் உபயோகப்படுத்த மாட்டார். வேறு யாருக்காவது தான் இந்த தங்கமும் பயன்படும். எல்லா கலைஞர்களும் சந்தித்து கொண்ட ஒரு விழாவாக தான் இதை நான் பார்க்கிறேன். இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.
விழாவில் மூத்த பத்திரிக்கையாளர்கள் தேவி மணி, கலைப்பூங்கா ராவணன், மாலி, நெல்லை பாரதி ஆகியோரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அப்போது பேசிய நெல்லை பாரதி, “ஏற்பது இகழ்ச்சி என்பர், ஆனால் ஏற்பது மகிழ்ச்சி என உணர்கிறேன்” என்றார்.
விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எடிட்டர் லெனின், வினியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, நடிகை கஸ்தூரி, இயக்குனர் விக்ரமன், இயக்குனர் சீனு ராமசாமி, சுசீந்திரன், இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் கண்ணன், கன்னட திரையுலகின் சார்பில் கிரிஷ் துவாரகீஷ், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இயக்குனர் பேரரசு, நடிகை ரோகிணி, தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், நடிகர் ராஜேஷ், இயக்குனர் வி.சேகர், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்,நடிகர் அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.