அடேங்கப்பா எம்மாம் பெருசு… : சிவகார்த்திகேயனை வியக்க வைத்த கேமரா கண்காட்சி!

உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது. ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும்.
தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கும் பணியை செய்து வருகிறார்.
சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும், முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற உள்ளது. இது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இருக்கும்.
புகைப்பட கலையை அதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் விதமாக புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின் போது பயன் படுத்தியது பற்றியும், சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படமும், கேமராக்கள் பற்றிய வரலாறு பேசும் படமும் என மொத்தம் மூன்று ஆவண படங்கள் பார்வையாளர்களுக்கு தினமும் திரையிடப்படும்.
மேலும் இந்த அருங்காட்சியகத்தின் முகப்பே ஒரு கேமராவின் தோற்றம் போலவும், நுழைவு வாயில் கேமராவின் லென்ஸ் போலவும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று. அதோடு இந்த அருங்காட்சியகத்தில் இன்னொரு சிறப்பம்சம் கிளிக் ஆர்ட் முறையில் புகைப்பட கலையின் முன்னோடியும் புகைப்படக் கலையின் பல சாதனங்களை கண்டுபிடித்தவர்களான பிரான்சு நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவை சேர்ந்த பிரபல புகைப்பட கலையின் முன்னோடியும் புகழ் பெற்ற கோடாக் நிறுவனத்தின் நிறுவனருமான ஜார்ஜ் ஈஸ்ட்மேனிடம் அவர் கண்டுபிடித்த பாக்ஸ் கேமராவை பெற்றுக்கொள்வது போலவும் செல்பி எடுத்து கொள்ளலாம்.
19ம் நூற்றாண்டு தொடங்கி 21ம் நூற்றாண்டு வரையிலான புகைப்பட கலையின் நீண்ட வரலாறை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பது ஆசிய அளவில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம்.
உலக புகைப்பட தினத்தில் இந்த அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைக்க, கேமரா வரலாறுகள் குறித்த ஆவண குறும்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் ” எனக்கு கேமராவைப் பத்தி எந்த விஷயங்களும் தெரியாது. அதுல ஈடுபாடு கூட கிடையாது. ஸூட்டிங் ஸ்பாட்ல கேமரா பக்கத்துல கூட நான் போனது கிடையாது. ஆனால் இந்தக் கண்காட்சிக்கு வந்து பார்த்தப்போ விதவிதமான கேமராக்கள் இருப்பதைப் பார்த்து வியந்து போயிட்டேன். அதுலேயும் ஒரு பெரிய கேமராவைப் பார்த்து இதுல எப்படி செல்பி எடுப்பாங்கன்னு கூட எனக்குள்ள தோணுச்சு. இப்படி கேமரா ஆர்வமே இல்லாத எனக்கே இந்தக் கண்காட்சிக்கு வந்த பிறகு கண்டிப்பா நாமும் ஒரு நல்ல கேமரா வாங்கி விதவிதமா போட்டோ எடுக்க கத்துக்கணும்னு ஆசை வந்துடுச்சு. கண்டிப்பா கேமரா வாங்கி போட்டோகிராபி கத்துக்குவேன்” என்றார் வியப்பு மாறாமல்…
சென்னை மட்டுமில்லாமல் விரைவில், சிங்கப்பூர், ஐதராபாத், பெங்களூர் என்று இந்தியாவில் பல மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் இந்த அருங்காட்சியகத்தை திறக்கப் போகிறாரார் ஓவியர் ஸ்ரீதர்.
”ஒளி ஓவியம்” உலகமெல்லாம் பரவட்டும்!